கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா வழக்கு நேற்று (ஜூலை 16) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று (ஜூலை 17) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவித்தனர்.
தீர்ப்பையொட்டி கர்நாடக முதல்வர் குமாரசாமி பெங்களூருவில் உள்ள சங்கர மடத்தில் பிரார்த்தனை செய்தார். 10.30 மணியளவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது. அதில், ஜூலை 18ஆம் தேதியன்று கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும், அக்கூட்டத்தில் பங்கேற்கும்படி எம்.எல்.ஏக்களை கட்டாயப்படுத்த முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் எனவும், அவருக்கு எவ்வித காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும், அரசியல் சமநிலையை பாதுகாப்பது மிக அவசியம் என்பதால் 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உரிய நேரத்திற்குள் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் ட்விட்டர் பக்கத்தில், “ஆபரேஷன் கமலா தோல்வியடைந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சபாநாயகர் ரமேஷ் குமாரும் வரவேற்பளித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தனது பொறுப்புகளை அதிகரித்துள்ளதாகவும், நீதிமன்றம் தன் மேல் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற முயற்சிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தீர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் ஜகதிஷ் ஷெத்தார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “குமாரசாமியால் மாநிலத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தீர்ப்பை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்புக்காக காத்திருக்காமல் குமாரசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதிக்காவிட்டாலும் சபாநாயகர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். ஓரிரு தினங்களில் அவர் முடிவெடுப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
தீர்ப்பு குறித்து கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான எடியூரப்பா, “கர்நாடக முதல்வர் பெரும்பான்மையை இழந்துவிட்டார். அவர் நாளை ராஜினாமா செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். இது அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும், எம்.எல்.ஏக்களுக்குமான வெற்றி. இது இடைக்கால உத்தரவு மட்டுமே. சபாநாயகரின் அதிகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் அடுத்தகட்டமாக முடிவெடுக்கும்” என்று தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
�,”