வரவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி அமைந்தால் விலைவாசி குறையும் என்று தனது பிரசாரத்தில் தெரிவித்துள்ளார் திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜி.
கரூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வருகிறார் அம்மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளரான செந்தில் பாலாஜி. இன்று (ஏப்ரல் 10) அவர் கரூர் பெரியார் நகர், ஆண்டாங்கோவில் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். மக்களிடையே பேசிய அவர், நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் பெட்ரோல், டீசல் விலை 2 மடங்காக உயரும் என்று தெரிவித்தார். “மோடியும் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து நாட்டை கொடுங்கோல் ஆட்சியாக மாற்றிவிடுவார்கள். ஆனால் பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைத் தந்துள்ளார் ராகுல் காந்தி. காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், நிச்சயமாக விலைவாசி குறையும்” என்று கூறினார் செந்தில் பாலாஜி.
கரூர் தொகுதியில் தொடர்ந்து 2 முறை மக்களவை உறுப்பினராக இருந்துவரும் தம்பிதுரை, தொகுதி மக்களின் பிரச்சினைக்காக ஒருபோதும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லை. நரேந்திர மோடியின் ஆட்சி மோசம் என விமர்சித்தவர் தம்பிதுரை. இப்போது, மீண்டும் அவருக்கே வாக்கு கேட்கிறார். இந்த தேர்தல் முடிந்தால், அடுத்த தேர்தலுக்கு தான் உங்களைச் சந்திக்க வருவார்” என்று கூறினார்.
செந்தில் பாலாஜி பிரச்சாரத்தில் பிரசாரத்தின் போது மாநில திமுக நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.�,