கரூரில் போட்டியிடுவது உறுதி கிடையாது: தம்பிதுரை

Published On:

| By Balaji

மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் தான் போட்டியிடுவது உறுதியில்லை என்று தெரிவித்துள்ள தம்பிதுரை, யார் வேண்டுமானாலும் அங்கு போட்டியிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

மக்களவைத் துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை கரூர் எம்.பி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றிபெற்று வருகிறார். இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலை குறிவைத்து கடந்த ஒரு வருடமாக கரூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு குறைதீர்ப்புக் கூட்டங்களை நடத்தி மக்களின் கோரிக்கைகளை கேட்டுவருகிறார்.

விரைவில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதையடுத்து, அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் தம்பிதுரை. இவருக்குப் போட்டியாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். இந்த நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி அமையும் பட்சத்தில், பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் தம்பிதுரை கரூர் தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் அதிமுக வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இன்று (பிப்ரவரி 15) செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “நான் கரூரில் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவெடுக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட யார் வேண்டுமானாலும் விருப்ப மனு அளிக்கலாம். அதில் என்ன தவறு இருக்கிறது? போட்டியிடுவதற்கான முடிவை பரிசீலனை செய்வது தலைமைக் கழகம்தான். தலைமைக் கழகம் சின்னத்தம்பிக்கு வாய்ப்பளித்தால் நாங்கள் சேர்ந்து அவருடைய வெற்றிக்காக பாடுபடுவோம். இதில் கருத்து வேறுபாடு ஒன்றும் கிடையாது” என்று தெரிவித்தார். “நான்தான் கரூரில் போட்டியிடுவேன் என்பதில் உறுதி ஒன்றும் கிடையாது” என்று தெரிவித்த தம்பிதுரை, பதவியை எதிர்பார்த்துக்கொண்டு நான் கரூர் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவில்லை எனவும் விளக்கினார்.

மேலும், கூட்டணி தொடர்பாக பேசிய தம்பிதுரை, “ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உள்ளது. ஒரு பொதுக்கருத்தை வைத்துப் போட்டியிடுவதுதான் கூட்டணி. தனித்துப் போட்டியிடுவது ஜெயலலிதாவின் கொள்கை என்பதால் அதனை செய்வோம் என்று கூறினோம். தற்போது தமிழகத்திற்கு நன்மை செய்கிறவர்களுடன் கூட்டணி என்று பன்னீர்செல்வமும், பழனிசாமியும் அறிவித்துள்ளனர். கூட்டணி குறித்து பேச குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு எடுத்துள்ள முடிவு என்னவென்பது எனக்குத் தெரியாது” என்று கூறியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share