கமல் மீது தேவராஜன் என்பவர் அளித்த புகார் மனுவுக்கு பதிலளித்துள்ள காவல் துறையினர், ‘கமல் மீது வழக்குப் பதிவு செய்ய எவ்வித முகாந்திரமும் இல்லாத காரணத்தினால் மனுவை முடித்து வைக்கிறோம்’ என்று அறிவித்தனர்.
தமிழகத்தில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வந்த நிலையில், டெங்குவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகத் தமிழகம் முழுவதும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. நிலவேம்பு குறித்துப் மாறுபட்ட தகவல்களும் வதந்திகளும் பரவியதால், நடிகர் கமல்ஹாசன் தனது நற்பணி இயக்கத்தினருக்கு, சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நிலவேம்புக் குடிநீரை வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு சித்த மருத்துவர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தேவராஜன் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.அதில், தமிழக அரசு மீது நம்பிக்கையில்லாத காரணத்தால்தான் கமல் இவ்வாறு பேசுகிறார். எனவே நிலவேம்பு குறித்து அவதூறு பரப்பும் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு கமல் அளித்திருந்த விளக்கத்தில், “சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை என்னுடைய இயக்கத்தினரை மட்டும் நிலவேம்புக் குடிநீரை விநியோகிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். சித்தா அலோபதி என்ற தனிச் சார்பு எனக்கில்லை என்றிருந்தார்.
இதனிடையே கமல்ஹாசன் மீதான தன்னுடைய புகாருக்கு காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி தேவராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார். இதில், புகாரில் முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தச் சூழ்நிலையில் புகார் மனு அளித்திருந்த தேவராஜனுக்கு, இன்று (அக்டோபர் 30) பதில் கடிதம் அனுப்பியுள்ள சென்னை காவல் துறையினர், “நடிகர் கமல்ஹாசன் மீது தாங்கள் அளித்திருந்த புகார் மனுவின் மீது விசாரணை மேற்கொண்டதில், இது தொடர்பாகக் குற்ற நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லாத காரணத்தால், உங்களின் மனு முடித்து வைக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
�,”