கனிமொழி மீதான வழக்கை தமிழிசை வாபஸ் வாங்கியது ஏன்?

Published On:

| By Balaji

தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான தமிழிசை சௌந்தர் ராஜன், கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அதை நேற்று (செப்டம்பர் 23) வாபஸ் பெற்றுக் கொண்டிருக்கிறார் தமிழிசை.

ஏற்கனவே தமிழிசை தொடுத்த வழக்கில் , ”கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளது, முறையற்ற வகையில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது இதுகுறித்து ஆட்சேபங்கள் தெரிவித்தபோது தூத்துக்குடி தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

தமிழிசை மனுவுக்குப் பதிலளிக்கும்படி கனிமொழி மற்றும் தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம்வழக்கைச் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையில் செப்டம்பர் 8 ஆம் தேதி தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழிசை சார்பில் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன் சட்ட ரீதியான பின்னணி பற்றி தேர்தல் வழக்குகளில் அனுபவம் மிக்க வழக்கறிஞரான அருணிடம் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி சார்பாக பேசினோம்.

“ இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி நீதிமன்ற அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவராக ஆளுநர் வரையறுக்கப்படுகிறார். நீதிமன்றம் அழைத்தாலும் கூட தான் வரமாட்டேன் என்று ஒரு ஆளுநரால் சொல்ல முடியும். எவ்வாறு சபாநாயகர் நீதிமன்ற நடவடிக்கைகளில் தான் ஆஜராக அரசியல் சட்டம் அளித்த வாய்ப்பின்படி தவிர்க்க முடியுமோ அதேபோல ஆளுநரும் நீதிமன்ற வரம்பிற்கு அப்பாற்பட்டவர். அதனால் ஆளுநராக இருந்துகொண்டு தேர்தல் வழக்கு நடத்துவது என்பது மரபு மீறிய நடைமுறையாகக் கருதப்படுகிறது. ஆனால் தமிழிசை தன் சொந்த விருப்பத்தின் பேரில் இந்த வழக்கை நடத்தியிருக்க முடியும். ஆளுநர் என்ற அரசியல் சாசனப் பதவிக்கு அவர் குந்தகம் விளைவிக்க விரும்பாததால் அதைச் செய்யவில்லை” என்று விளக்கம் அளித்தார் அருண்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share