கடந்த ஜனவரி மாத பிற்பகுதியில் முழுக்க முழுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்றார் திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவைக் குழுத் தலைவருமான கனிமொழி எம்பி. அப்போது பல கிராமங்களில் மக்கள் வைத்த கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றினார்.
ஜனவரி 27 ஆம் தேதி தூத்துக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி கிராமத்தில் ஊராட்சி சபையில் கலந்துகொண்டார் கனிமொழி. அப்போது அவரிடம் பேசிய பெண்கள் பலர், ‘எங்க சுத்துவட்டார மக்களுக்கு சரியான சுகாதார வசதி இல்ல. கண் பிரச்சினை இருக்கு கண்ணாடி வாங்க முடியல’ என்று குறைகளைப் பட்டியலிட்டனர்.
அப்போது கனிமொழி மக்களிடம், ‘நான் வெகு விரைவில் உங்களுக்காக ஒரு மருத்துவ முகாமை இந்த பகுதியில் நடத்த ஏற்பாடு செய்கிறேன். அதில் உங்கள் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு காணப்படும்’ என்று வாக்குறுதி அளித்தார்.
கனிமொழி சொன்ன மாதிரியே இன்று பிப்ரவரி 17 ஆம் தேதி மாப்பிள்ளையூரணி கிராமத்தில் மெகா மருத்துவ முகாம் தொடங்கியது.
கிராம மக்களின் நிலைமை பற்றி அப்பல்லோ, அரவிந்த கண் மருத்துவமனை ஆகிய மருத்துவமனை நிர்வாகங்களுடன் பேசிய கனிமொழி தன் ஏற்பாட்டில் மாப்பிள்ளையூரணி மக்களுக்கு மெகா மருத்துவ முகாம் நடத்திட உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஏற்பாடுகள் மளமளவென நடந்தன.
அப்பல்லோ, அரவிந்த் மருத்துவமனை சார்பில் சிறந்த மருத்துவ நிபுணர்களும், செவிலியர்களும் மாப்பிள்ளையூரணி மருத்துவ முகாமில் கலந்துகொண்டனர்.
காது, மூக்குத் தொண்டை, பொது மருத்துவத்தில் தொடங்கி வயிற்றுப் பிரச்சினை, இருதய நோய், நுரையீரல் கோளாறுகள், குழந்தைகள் மருத்துவம், பெண்களுக்கான பிரத்யேக பிரச்சினைகள், மகப்பேறு மருத்துவம், கண் மருத்துவம், சர்க்கரை நோய்க்கான சிகிச்சை என அனைத்து வகை பிரச்சினைகளுக்கும் மாப்பிள்ளையூரணி மருத்துவ முகாமில் உரிய மருத்துவர்களைக் கொண்டு ஆலோசனைகளும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல் கண் புரை போன்ற பிரச்சினைகளைக் கண்டறிந்து உரிய மூக்கண்ணாடிகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
சாதாரண சோதனை முதல் ஈசிஜி, ஸ்கேன் வரையிலான உயர் தர மருத்துவம் வரையில் இந்த மருத்துவ முகாமில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது.
இன்னும் ஒருபடி மேலாக அறுவை சிகிச்சை தேவைப்படுகிறவர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இலவசமாக உயர் தர அறுவை சிகிச்சைக்கான அனுமதிச் சீட்டுகளும் இந்த மருத்துவ முகாமில் வழங்கப்படுகின்றன.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி போட்டியிட இருக்கிறார் என்ற தகவல்கள் வரும் நிலையில் இதுபோன்ற மருத்துவ முகாம்களை இன்னும் பல கிராமங்களில் தொடரவும் கனிமொழி திட்டமிட்டுள்ளாராம்.
இத்தனைக்கும் இன்று மருத்துவ முகாம் நடக்கும்போது கனிமொழி மாப்பிள்ளையூரணிக்கு வரவில்லை. அவர் டெல்லியில் இருக்கிறார். ஆனாலும் மக்கள், ‘கனிமொழிக்கு எங்க நன்றிய சொல்லிடுங்க’ என்று தூத்துக்குடி திமுக மாசெ அனிதா ராதாகிருஷ்ணனிடம் சொல்லிச் செல்கின்றனர்.
”தேர்தலில் நிக்கிறதுக்கு முன்னாடியே, தான் கொடுத்த வாக்குறுதிய 2 வாரத்துல நிறைவேத்துற கனிமொழி, தேர்தல்ல ஜெயிச்ச பின்னாடி எவ்வளவு வேகமா செயல்படுவாங்கனு இப்பவே எங்களுக்குத் தெரிஞ்சு போச்சு” என்று நெகிழ்கிறார்கள் மாப்பிள்ளையூரணி மக்கள்.
�,