தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி வேட்பாளராக நிற்பது உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக அணியில் பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை போட்டியிடலாம் என்பதே இப்போதைய நிலவரம்.
இதற்கிடையில் தூத்துக்குடியை பாஜகவுக்குக் கொடுக்க வேண்டாம் என்று அத்தொகுதி நேர்காணலின் போது ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளும் தலைமையிடம் கோரிக்கை வைத்தனர். பாஜகவிலும் தமிழிசை அங்கே நிறுத்தப்படுவது தோற்கடிக்கப்படுவதற்கா என்ற பேச்சும் தமிழிசை ஆதரவாளர்களிடையே நிலவுகிறது.
இந்த சூழலில் ஒரு திருப்பமாக கலைஞரின் மூத்த மகனும் ,முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியை தூத்துக்குடியில் நிறுத்தி அவருக்கு ஆதரவு அளிக்க பாஜக சார்பில் ஒரு ரகசிய திட்டம் தீட்டப்பட்டு வருகிறது என்று டெல்லியில் இருந்து சில தகவல்கள் கிடைக்கின்றன.
அழகிரி சமீப நாட்களாக அரசியல் செயல்பாடுகள் ஏதும் இல்லாமல் அமைதியாக இருக்கிறார். ஆனால் அவ்வப்போது திமுக-காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில் கூட, ‘கடந்த தேர்தலைப் போலவே திமுக தோல்விஅடையும் ‘ என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அழகிரியை பாஜகவின் மேலிடப் புள்ளிகள் சிலர் தொடர்புகொண்டிருக்கிறார்கள். பாஜக தலைவர் அமித் ஷாவின் ஆணைக்கிணங்கவே தாங்கள் பேசுவதாக சொன்னவர்கள், ‘அரசியலில் ரீ எண்ட்ரி ஆகும்விதமாக நீங்கள் ஏன் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடக் கூடாது?’ என்று ஆரம்பித்து அழகிரியிடம் சில வியூகங்களை விளக்கியிருக்கிறார்கள். அதிமுகவினரும் தொடர்ந்து இதுபற்றி அழகிரியிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இதுபற்றி கமிட் ஆகாத அழகிரி, இந்த விவகாரம் பற்றி தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் பேசியிருக்கிறார்.
‘நான் தூத்துக்குடி தொகுதியில நின்னா என்னை திமுகவுக்கு எதிரான பொது வேட்பாளராக ஆதரிக்க பிஜேபியும், அதிமுகவும் தயாரா இருக்காங்க. நான் அங்க போட்டியிட்டா பிரச்சாரத்துல ஸ்டாலினைப் பத்தியும் திமுகவை அவர் நடத்துற விதம் பத்தியும் பேச எனக்கு ஒரு வாய்ப்பா இருக்குமே?’ என்று கேட்டு வருகிறாராம் அழகிரி.
திமுக சார்பில் தனது தங்கை கனிமொழி போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிடவும் அழகிரிக்குத் தயக்கம் இருப்பதாக தெரியவில்லை என்கிறார்கள் அழகிரி வட்டாரத்தில். கலைஞரின் மறைவுக்குப் பின் ஸ்டாலின் கட்சித் தலைவர் ஆனதில் இருந்து கனிமொழி முழுக்க முழுக்க தலைமைக்குக் கட்டுப்பட்டவராகவே தன்னை வெளிப்படுத்தி வருகிறார். ‘ என் அண்ணன் என்பதற்காக அல்ல, என் கட்சியின் தலைவர் என்பதால், ஸ்டாலின் பக்கமே நான் இருப்பேன்’ என்ற தனது நிலையை ஸ்டாலினிடமே தெளிவுபடுத்திவிட்டார் கனிமொழி. கலைஞர் மறைவுக்குப் பின் அழகிரியுடன் கனிமொழி பேசுவதுமில்லை .
கனிமொழியை எதிர்த்து நிற்கலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார் அழகிரி. ஆனாலும், இந்த விஷயத்தில் தீர்மானமாக முடிவெடுப்பாரா என்று அதிமுகவினரும், பாஜகவினரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.�,