காம்கேர் கே. புவனேஸ்வரி
ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரேனும் ஒருவர் பெண்களுக்காக குரல் எழுப்பியபடிதான் இருக்கிறார்கள். தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த நூற்றாண்டில் #metoo இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்குத் தாங்களே குரல்கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதன் மூலம் சினிமா துறை சார்ந்த பெண்கள் தாங்கள் பல வருடங்களுக்கு முன்பு பட்ட கஷ்டங்களையும் அவமானங்களையும் பகிர்ந்துகொள்ளத் துணிந்துள்ளனர்.
**கீழே இழுக்கும் கரங்கள்**
சினிமா துறையில் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் மேலே முன்னேற முடியாமல் அவர்களைக் கீழ் நோக்கி இழுக்கும் செயல்பாடுகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களுக்கும், கட்டடம் கட்டும் இடங்களில் சித்தாள் பெண்களுக்கும் ஏற்படாத தொந்தரவுகளா?
இவ்வளவு ஏன், வீட்டில் ஒரு பெண்ணால் தன் இஷ்டப்படி செயல்பட முடிகிறதா? தன் கனவுகளை நனவாக்கிக்கொள்ள முடிகிறதா?
எத்தனை குடும்பங்களில் ஆண் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காகப் பெண்கள் தங்கள் படிக்கும் ஆர்வத்தை தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது.
தங்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியதோடு தங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் ‘கேர் டேக்கராகி’ தங்கள் வயதான காலத்தில்கூடத் தாங்கள் இஷ்டப்படும் வாழ்க்கையை வாழ முடியாத நிர்பந்தத்துக்குத் தள்ளப்படும் அம்மாக்கள் எத்தனை பேர் வாய் மூடி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆணுக்குப் பெண் சமம் என்ற பாரதி வாக்கு பலித்தது உண்மைதான். ஆனால் புரிந்துகொள்ளாத, அனுசரணையாக இல்லாத கணவனால், எத்தனை பெண்கள் வீட்டு வேலை, அலுவலக வேலை என இரட்டை பாரம் சுமந்துகொண்டு வெளியில் சிரித்தபடி வளைய வந்துகொண்டிருக்கிறார்கள்.
ஒருபக்கம் பெண்களுக்கான சிக்கல்கள் இப்படி இருக்க, ஆண்களும் ‘நாங்கள் மட்டும் என்ன பாதுகாப்பாகவா இருக்கோம்’ என கொடிதூக்க ஆரம்பித்துள்ளனர்.
**ஆண்களுக்கும் தொந்தரவு!**
என் நண்பர் ஒருவர் ஃபேஸ்புக் புரொஃபைல் பிச்சராகத் தன் அப்பாவின் புகைப்படத்தை வைத்திருந்தார். 45 வயது ஆணுக்கு அப்படி என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது என்று எண்ணியபடி அவரிடம் விசாரித்தேன்.
‘அப்பாவின் புகைப்படத்தை வைத்திருந்தால் யாரோ வயதானவர் என நினைத்துத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்… அதனால்தான் அப்பாவின் புகைப்படத்தை வைத்திருக்கிறேன்…’ எனச் சொன்னபோது ஆச்சரியத்துடன் நான் கேட்டேன்… ‘உங்களைப் பெண்கள் தொந்தரவு செய்கிறார்களா…’ என்று.
‘இல்லை இல்லை, ஆண்களை ஆண்களே தொந்தரவு செய்வதுதான் இப்போதைய ட்ரெண்ட். ஃபேஸ்புக் இன்பாக்ஸில் ஆண்கள்தான் தொந்தரவு செய்கிறார்கள். அசிங்கமாகப் பேசுகிறார்கள். அநாகரிகமாக நடந்துகொள்கிறார்கள்…’
இந்தத் தகவல் எனக்கு அதிர்ச்சி மட்டுமல்ல; ஆச்சரியமும்தான்.
எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் நாம் எனப் பதறும் வேளையில், பொதுவாகவே நம் எல்லோருக்குமே கொஞ்சம் உணர்வு ரீதியான அலசல் தேவைப்படுகிறதோ என யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
**ஆண் நிர்வாகமும் பெண் நிர்வாகமும்!**
சமீபத்தில் எழுத்தாளர் மாலன் எழுதிய ‘என் ஜன்னலுக்கு வெளியே…’ புத்தகத்தில் ‘ஆணுக்கும் அந்த வலி உண்டா?’ என்ற கட்டுரையை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அந்தக் கட்டுரையில் ‘பெப்சிகோ’வின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், தலைவராகவும் செயல்பட்டு வந்த இந்திரா நூயியின் நேர்காணலை விவரித்திருந்தார் நூலாசிரியர்.
நேர்காணல் செய்பவர் அவர் முன் ஒரு கேள்வியை வைக்கிறார். ‘உங்கள் நிர்வாகச் செயல்பாடுகளில் ஒரு பெண்ணின் அணுகுமுறை இருப்பதாகவே இந்த உலகம் பார்க்கிறது. அது குறித்துச் சொல்லுங்கள்…’
இதற்கு இந்திரா நூயி சொல்லும் பதில் நம் ஒவ்வொருக்குமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
‘எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கு இரண்டு வாரத்துக்கு ஒரு முறை கடிதம் எழுதுகிறேன். ஒரு பக்கக் கடிதம்தான் அது. பிசினஸ் மற்றும் சொந்த விஷயம் இரண்டுமே அதில் இருக்கும்.
இரண்டு வாரத்துக்கு முன் நான் எழுதிய கடிதத்தில் என் மகளைப் பற்றி எழுதி இருந்தேன். என் மகள் மேல்நிலைப் பள்ளியில் கடைசி வருடம் படித்துக்கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு வருடமும் பள்ளிக்குச் செல்லும் முதல் நாள் நானும் என் கணவரும் மகளுடன் போட்டோ எடுத்துக்கொள்வோம்.
இந்த வருடமும் அப்படி எடுத்துகொண்ட பிறகு அவள், ‘அம்மா இனி நான் காரில்தான் போகப்போகிறேன். நானே காரை ஓட்டிக்கொண்டு போய்க்கொள்கிறேன்’ என்றபோதுதான் எங்களுக்கு உறைத்தது, அவள் இன்னமும் சின்னக் குழந்தை அல்ல, இளம் பெண்ணாகிவிட்டாள் என்ற உண்மை.
ஸ்கூல் பஸ்ஸில் உட்கார்ந்து உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு டாடா காட்டிய அந்த யுனிஃபார்ம் அணிந்த சிறுமி எங்கே தொலைந்து போனாள். அதற்குள் இளம் பெண்ணாகிவிட்டாள்… காலம் பறந்துகொண்டிருக்கிறது.
இதைத்தான் என் நிறுவன ஊழியர்களுக்கு எழுதினேன். உங்கள் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுங்கள். ஏனெனில் ஒரு சிறுமி இளம் பெண்ணாகி உங்களை விட்டுப் பிரிந்து செல்லும் நாள் வரும்போது நீங்கள் உடைந்துபோவீர்கள். இந்த இனிமையான நாட்கள் திரும்பக் கிடைக்காது…
இப்படி நான் கடிதம் எழுதியதைப் போல் ஓர் ஆண் நிர்வாகி எழுதியிருப்பாரா…
என்ன ஓர் அட்டகாசமான பதில். ஒரு நிர்வாகியாக நானும் இதுபோல பல அணுகுமுறைகளை என் நிறுவனத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் கடைப்பிடிப்பதால் அந்தக் கட்டுரை என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது.
2007ஆம் ஆண்டு என் பெற்றோர் பெயரில் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ அறக்கட்டளையைத் தொடங்கியபோது சென்னை வாணி மஹாலில் ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’ என்ற 1-1/2 மணிநேர ஆவணப்படத்தை வெளியிட்டோம். அந்தப் படத்தை நான் தயாரித்ததோ, அறக்கட்டளை தொடங்கப்போவதோ முன்கூட்டியே என் பெற்றோருக்குத் தெரியாது. சர்ப்ரைஸ்.
அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் எங்கள் பெற்றோருக்கும் எங்களுக்குமான (நான், என் தங்கை, தம்பி) ரிலேஷன்ஷிப்பை விவரிக்கும் விதமாகக் காட்சிகளை அமைத்திருந்தேன். நாங்கள் சிறு வயதில் இருந்ததைப் போல முகச்சாயல் உள்ள மூன்று குழந்தைகள் மற்றும் என் அப்பா அம்மா சாயலை ஒத்த ஒரு தம்பதியைத் தேர்ந்தெடுத்து நடிக்கக் கற்றுக்கொடுத்து, ஸ்கிரிப்ட் எழுதி, பாடல்கள் இயற்றி, இசை அமைத்து ஷூட்டிங் எடுத்து, எடிட்டிங் செய்து சினிமா போலவே தயாரித்திருந்தோம். இடைவேளைக்குப் பிறகு இரண்டாவது பகுதியில் எங்கள் உறவினர்கள் மற்றும் அப்பா அம்மாவுடன் பணிபுரிந்த முப்பதுக்கும் மேற்பட்ட நண்பர்களைப் பேட்டி எடுத்து இணைத்திருந்தேன்.
நிகழ்ச்சிக்குக் கூடுதல் சர்ப்ரைஸாக உறவினர்களையும், அப்பா அம்மாவின் அலுவலக நண்பர்களையும் அழைத்திருந்தேன். அதில் அப்பா அம்மா இருவருக்குமே அளவிலா ஆனந்தம்.
இதெல்லாம் பெரிய விஷயம் அல்ல.
இந்த ஆவணப்படத்தில் எனக்கு அசிஸ்டென்ட்டாகப் பணியாற்றியவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தேன்.
அவர் பெயர் வெங்கடேஷ். சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமம். என் நிறுவனத்தில் அனிமேஷன் பிரிவில் பல வருடங்கள் பணியாற்றியவர். ஒருமுறை அலுவலக மீட்டிங்கில் அவரது பர்சனல் விஷயம் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார். அவர் அப்பா குடிக்கும் வழக்கம் உள்ளவர். அம்மாவும் அப்பாவும் சேர்ந்து எங்கேயும் வெளியில் சென்று தான் பார்த்ததே இல்லை எனவும், ஏன் தீபாவளி பொங்கலுக்குக்கூட புடவை வாங்கக் கடைக்கு அழைத்துச் சென்றதில்லை எனவும் தன் குடும்பச் சூழலை விவரித்திருந்தார்.
இது என் மனதில் பதிந்துபோனது. ஆவணப்படத்தை ரிலீஸ் செய்கின்ற நாளில் அவரது பெற்றோரை வரச்செய்தால் என்ன எனத் தோன்றியதால் அதை அவருக்குத் தெரியாமல் அமல்படுத்தினேன்.
அவர் தம்பிக்கு போன் செய்து விவரம் சொன்னேன். அவர் பெற்றோர், சகோதரன் சகோதரி என ஐவருக்கும் சேர்த்து ட்ரெயின் டிக்கெட் முன் பதிவு செய்யவும், சென்னையில் தங்குவதற்கு நல்ல ஓட்டலில் ரூம் புக் செய்யவும் ஏற்பாடு செய்தேன்.
விழாவின் முடிவில் ஆவணப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் தகுந்த மரியாதை செய்தேன். என் அசிஸ்டென்ட்டுக்கு, அவர் அப்பா அம்மாவை மேடைக்கு அழைத்து அவர்கள் முன்னிலையில் ‘Best Visualizer’ என்ற விருதளித்து கவுரவித்தேன்.
அந்த நிகழ்ச்சியில் நான் என் பெற்றோரின் பெயரால் அறக்கட்டளை ஆரம்பித்து அவர்களை கவுரப்படுத்தியதை விடவும், நான் தயாரித்திருந்த ஆவணப்படத்தை விடவும் பார்வையாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது எது தெரியுமா? என் அசிஸ்டென்ட்டின் பெற்றோரை சர்ப்ரைஸாக வரச் செய்து அவர்கள் முன்னிலையில் விருது கொடுத்த சம்பவம்தான்.
இதை ஓர் ஆண் நிர்வாகி செய்திருப்பாரா என்பது சந்தேகமே.
ஒரு நிர்வாகி ஆணாக இருக்கும்பட்சத்தில் அவன் தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொடுக்கலாம், செய்கின்ற வேலைக்கு வெகுமதிகள் கூட்டித் தரலாம், கிஃப்ட்டுகளும் பார்ட்டிகளும் கொடுத்து அசத்தலாம். ஆனால், இப்படி அவர்களை உணர்வுபூர்வமாக அணுகியிருக்க முடியுமா என்பது சந்தேகமே.
எதிராளியின் உணர்வுகளை அதிகம் புரிந்துகொள்ளும் திறனும், அதற்கேற்றாற்போல செயல்படும் ஆளுமையும் ஆணைவிட பெண்ணுக்குக் கொஞ்சம் அதிகம் என்றே சொல்ல வேண்டும்.
அது கர்ணனின் கவச குண்டலம் போல இயற்கை பிறக்கும்போதே அவர்களுக்குக் கொடுத்த வரம்.
இந்த வரத்தைச் சரியாக பயன்படுத்துவதும், தவறாகப் பயன்படுத்துவதும் ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட சுபாவம். அதைப் பொதுமைப்படுத்தக் கூடாது.
யோசிப்போம்.
(அடுத்த வெள்ளியன்று தொடரும்)
[பகுதி 1](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/11/09/22)
(கட்டுரையாளர் காம்கேர் கே. புவனேஸ்வரி காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் என்னும் ஐ.டி நிறுவனத்தின் CEO. நிர்வாகி, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என பன்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MDஆகக் கடந்த 25 ஆண்டுக்கும் மேலாகச் செயல்பட்டுவருகிறார். தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியல் குறித்த 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும் தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகங்கள் சார்ந்த கல்லூரிகளில் பாடத்திட்டமாக உள்ளன. இவரைத் தொடர்புகொள்ள: compcare@hotmail.com)�,”