கந்து வட்டியால் நிகழ்ந்த தீக்குளிப்பு சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று நெல்லை காவல் துறைக் கண்காணிப்பாளர் அருண்சக்தி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்த சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காவல் துறையும், மாவட்ட ஆட்சியரும் கண்டுகொள்ளாததால் இந்தக் கோர சம்பவம் நிகழ்ந்ததாகப் பேசப்படுகிறது.
இது தொடர்பாக நெல்லை காவல் துறைக் கண்காணிப்பாளர் அருண்சக்தி இன்று (அக் 24) செய்தியாளர்களிடம் பேசினார். “காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இசக்கி முத்து, சுப்புலட்சுமி குடும்பத்தினர் பலரிடமிருந்து கடன் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. தளவாய்ராஜ், முத்துலட்சுமி தம்பதியிடமிருந்து இசக்கி முத்து குடும்பத்தினர் வீடு கட்ட ரூ.85 ஆயிரமும் குழந்தைகளின் காதுகுத்து நிகழ்ச்சிக்காக ரூ.60 ஆயிரமும் கடனாகப் பெற்றுள்ளனர். அதைத் திரும்பச் செலுத்தவில்லை என்று காவல் துறையில் அவர்கள்மீது வழக்கு உள்ளது. இது தொடர்பாகக் காவல் துறை விசாரணைக்கு அழைத்தபோது, இசக்கி முத்து ஆஜராகவில்லை. கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்று சொல்லி, கடன் கொடுத்த முத்துலட்சுமியும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்” என்று அருண்சக்தி தெரிவித்தார்.
“இசக்கி முத்து குடும்பத்தினர் தீக்குளித்தது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முழு விசாரணை முடிந்த பிறகே அதிகாரபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்யப்படும். வருவாய்த் துறையும் காவல் துறையும் இணைந்து விசாரணை நடத்தவுள்ளது” என்றும் அருண்சக்தி கூறினார்.
நெல்லையில் 2003 முதல் 2014 வரை 246 கந்து வட்டி தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 221 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. 4 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டது. மீதமுள்ள வழக்குகள் விசாரணையில் உள்ளன. கந்து வட்டி தொடர்பான அனைத்துப் புகார்கள்மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அருண்சக்தி உறுதி அளித்தார்.
இதற்கிடையே தீக்குளிப்புச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் 4 வாரங்களிலும், காவல் கண்காணிப்பாளர் 8 வாரங்களிலும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.�,