கந்துவட்டிக் கொடுமை: தற்கொலைக்கு அனுமதி கேட்ட பெண்!

public

கோவில்பட்டியில் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலைக்கு அனுமதி கோரிய பெண்ணை கோட்டாட்சியரும் காவல் துறையினரும் காப்பாற்றியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவர் மனைவி வனிதா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சுப்புராஜ், தற்போது சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு, சென்னையில் டிரைவராக வேலை செய்து கொண்டிருந்தபோது ஒரு விபத்தில் சிக்கி காயமடைந்திருக்கிறார்.

அப்போது, மருத்துவச் செலவுக்காக கடம்பூரைச் சேர்ந்த முருகேசபாண்டியன் என்பவரிடம், 10 பைசா வார வட்டிக்கு ரூ.4,20,000 வாங்கியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வட்டி செலுத்த முடியவில்லை என்பதால், வட்டி கொடுப்பதற்காக வேறு சிலரிடம் சுப்புராஜும் வனிதாவும் கடன் வாங்கியிருக்கின்றனர்.

உள்ளூரில் சரியான வேலை கிடைக்காததால், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டும் என்பதால், சுப்புராஜ் கடன் வாங்கி சவுதிக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். ஆனால், பேசியபடி அங்கு அவருக்கு ஊதியம் கொடுக்காமல், குறைவான ஊதியம் கொடுக்கப்பட்டதால் சரியாக வட்டி கட்ட முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.

அதனால் வேறு வழியில்லாமல் வட்டி கட்ட வேண்டும் என்பதால், மேலும் சிலரிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருக்கிறார். ஆனால், அனைவருமே 10 பைசா வார வட்டியாகவே கொடுத்திருக்கின்றனர்.

முதலில் வாங்கிய கடனை அடைக்க, கடன் வாங்கி தற்போது ரூ.20 லட்சம் வரை வனிதாவின் குடும்பத்துக்குக் கடன் சேர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலருக்கும் வாங்கிய அசல் பணத்தை விடவும் அதிகமாகக் கொடுத்துவிட்ட போதிலும், பணம் கொடுத்தவர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், வனிதாவுக்குக் கோவில்பட்டி கருமாரியம்மான் கோயிலைச் சேர்ந்த ஆசிரியை புஷ்பா என்பவர், ரூ.1,70,000-ஐ 10 பைசா வார வட்டிக்குக் கொடுத்திருக்கிறார். வனிதாவும் தற்போது வரை ரூ.2 லட்சம் வட்டியாகச் செலுத்தியிருக்கிறார்.

ஆனால், அசல், வட்டி என ரூ.6 லட்சம் தர வேண்டும் என புஷ்பாவும், அவர் கணவர் ராமமூர்த்தி ஆகியோர் தொடர்ந்து வனிதாவை மிரட்டி வந்ததாகவும், வனிதாவை புஷ்பாவின் கணவர் ராமமூர்த்தி போனில் ஆபாசமாகத் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்து போன வனிதா, அவரின் இரண்டு மகன்கள், அத்தை யசோதா ஆகியோரை அழைத்துக்கொண்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு கோட்டாட்சியர் சங்கரநாராணயனிடம், “நாங்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அதற்கு அனுமதி அளியுங்கள்” என்று கூறிவிட்டு மனு அளித்திருக்கிறார்.

வனிதாவின் மனுவைக் கோட்டாட்சியர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவர் கோட்டாட்சியரின் காலில் விழுந்தார். இதையடுத்து, புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உறுதியளித்தார். இதுகுறித்து பேசிய வனிதா, “கந்துவட்டி தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ரூ.30 லட்சம் மதிப்பிலான வீட்டை விற்று கடனை அடைக்க முயற்சி செய்தாலும், கந்து வட்டிக் கும்பல் அதையும் விற்பனை செய்ய விடவில்லை. கந்துவட்டி கொடுத்த ஒருவரே ரூ.10 லட்சம் என அடிமாட்டு விலைக்குக் கேட்கிறார்.

வீட்டுக்குள் அமர்ந்து கொண்டு போனில் ஆபாசமாகப் பேசுகிறார்கள். இதில், ஆசிரியை புஷ்பாவின் கணவர் ராமமூர்த்தி, அருவருக்கத்தக்க வகையில் திட்டுகிறார். கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்றார் வேதனையுடன்.

வனிதாவின் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த விவகாரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து, அவர் உத்தரவின் பேரில் போலீஸார் தற்போது, கந்துவட்டிக்காரர் ராமமூர்த்தியை கைது செய்திருக்கின்றனர்.

மேலும், மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *