‘இந்திய முட்டைகளை மீண்டும் கத்தாருக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்க வேண்டும்’ என்று பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2006 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் பறவைக் காய்ச்சல் வியாதி பிரச்னை எழுந்த சமயத்தில் இந்தியாவிலிருந்து கோழி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு கத்தார் நாடு அங்குத் தடை விதித்தது. அதன்பின்னர் அந்நாடு ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவிடமிருந்து முட்டைகளை இறக்குமதி செய்து வருகிறது. இந்தத் தடைக்கு முன்னர் கத்தார் நாட்டின் முட்டைத் தேவையில் சுமார் 80 சதவிகிதத்தை இந்தியா பூர்த்தி செய்து வந்தது. அதன் பின்னர் விதிக்கப்பட்ட தடையால் இந்தியாவின் ஒட்டுமொத்த முட்டை ஏற்றுமதியிலும் சுணக்கம் ஏற்பட்டது.
உலக விலங்குகள் நல அமைப்பின் விதிமுறைகளின்படி, தடைவிதிக்கப்பட்ட முட்டை போன்ற பொருள்களுக்கான தரம் சோதிக்கப்பட்ட அடுத்த 90 நாள்களில் தடை நீக்கப்படும். ஆனால், கத்தார் நாடானது இந்தியாவுக்கான சந்தையை மீண்டும் திறவாமலேயே உள்ளது. மாறாக, பக்ரைன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து முட்டையை இறக்குமதி செய்து தனது தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறது. இந்தியாவிலிருந்து பக்ரைன் மற்றும் ஓமன் நாடுகளுக்குக் கோழி, முட்டை உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வதற்கான தடையானது சில பரிசோதனைகளுக்குப் பின்னர் நீக்கப்பட்டது. ஆனால், கத்தார் மட்டும் தடையை நீக்க மறுத்து வருகிறது. இத்தடையை நீக்குவதற்கு மத்திய அரசானது கத்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியா கடந்த 2016-17 நிதியாண்டில் மொத்தம் 4,49,527 டன் அளவிலான கோழி, முட்டை உள்ளிட்ட பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.53,164.70 லட்சமாகும். இதில் முட்டைகள் மட்டும் 4,46,479.16 டன் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.50,137.76 லட்சமாகும். இந்தியாவின் முட்டை ஏற்றுமதிக்கான முக்கிய நாடுகளாக ஓமன், மாலத்தீவுகள், இந்தோனேசியா, சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.�,