�
இந்தியாவில் கணினி விற்பனை ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 20.5 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருப்பதாக (IDC – International Data Corporation) ஐடிசி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நுகர்வோரின் தேவை மற்றும் சிறப்புச் சலுகைத் திட்டங்கள் வாயிலாக ஜூலை – செப்டம்பர் காலாண்டில் மட்டும் 30.3 லட்சம் கணினிகள் விற்பனையாகியுள்ளன. இதன்மூலம் கடந்த ஆண்டில் இதே கால விற்பனையை விட 20.5 சதவிகிதம் கூடுதலான அளவில் கணினிகள் விற்பனையாகியுள்ளதாக ஐடிசி தெரிவித்துள்ளது. கல்வித் திட்டங்களில் இலவசமாக வழங்கப்படும் 10,000 கணினிகளைச் சேர்க்காமலேயே கணினிச் சந்தை வளர்ச்சி வருடாந்திர அடிப்படையில் 10.9 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து ஐடிசி நிறுவனத்தின் துணை ஆராய்ச்சி நிறுவனர் மனிஷ் யாதவ், வேலைவாய்ப்பின்மை, விலை உயர்வு ஆகியன ஒருபுறம் இருந்தபோதிலும் பண்டிகைக் கால சிறப்புச் சலுகைகள், இதரச் சலுகைகள் மூலம் கணினி விற்பனை ஜூலை – செப்டம்பர் காலாண்டில் நல்ல வளர்ச்சியடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வணிகப் பயன்பாட்டுக்கான கணினி விற்பனையில், ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 15.2 லட்சம் கணினிகள் விற்பனையாகி, கடந்த ஆண்டை விட (40.2 %), இந்த ஆண்டு (50.2 %) 10 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. கணினி சந்தையில் ஹெச்.பி. நிறுவனம் 31.1 சதவிகிதப் பங்குகளுடன் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டது. இந்த வரிசையில் லெனோவோ 24.1 சதவிகிதப் பங்குகளும், டெல் 20 சதவிகிதப் பங்குகளும், ஏசர் 10.8 சதவிகிதப் பங்குகளும் கொண்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.�,