கணக்கர் பணிக்காக தேர்வு எழுதிய பத்தாயிரத்து 815 பேரும் தோல்வியடைந்த சம்பவம் கோவா மாநிலத்தில் நடந்துள்ளது.
கணக்குகள் துறை இயக்குனரகம் சார்பில் கோவா அரசின் பல்வேறு துறைகளில் 80 கணக்கர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த தேர்வு கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெற்றது.
தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு மற்றும் கணக்கியல் துறை சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டன. மொத்தம் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தது 50 சதவிகிதம் அளவிற்கு மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று (ஆகஸ்ட்,21) அறிவிக்கப்பட்டன. இதில் தேர்வு எழுதிய பத்தாயிரத்து 815 பேரில் ஒருவர் கூட தேர்ச்சிபெறவில்லை என கணக்குகள் துறை இயக்குனரகத் தலைவர் பிரகாஷ் பெரேரா தெரிவித்துள்ளார். கடினமான கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும் இருந்த போதிலும் போட்டியாளர்கள் தேர்ச்சி பெறாதது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.�,