தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து ஒரு கட்சியைச் சேர்ந்தவர் போலச் செயல்பட்டதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றிய டி.சங்கர் என்பவர், தன்னைப் பணி நீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி, போதிய கல்வித் தகுதி இல்லாமல் பணியாற்றும் 32 பேராசிரியர்கள் தங்களின் கல்வித் தகுதி, நியமனம் குறித்த தகவல்களைப் பதில் மனுக்களாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, சட்டப் பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தனி நீதிபதி வழக்கின் எல்லையை மீறித் தன் விருப்பம் போல உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராகத் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு.
இந்த வழக்கு நேற்று (பிப்ரவரி 18) மீண்டும் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி நேரில் ஆஜரானார். நீதிமன்ற அறையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
விசாரணையின்போது, சட்டப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் நியமனம் அனைத்தும் யூஜிசி விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுவதாகத் தெரிவித்தார் தமிழக அரசு தலைமை வழக்குரைஞர். இதையடுத்து, “சட்டப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் நியமனம் எப்படி நடைபெறுகிறது என்று தெரியும். தனியார் ஹோட்டலில் எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து ஒரு கட்சியைச் சேர்ந்தவர் போல துணைவேந்தர் செயல்பட்டது தெரியும்” என்று கூறி கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள்.
இது குறித்து எதுவும் பேச வைக்காதீர்கள் என்றும், துணைவேந்தர் 180 டிகிரியில் நின்றதையும் பார்த்துள்ளோம் என்றும் சாடிய நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.�,