கடிதம் எழுதினால் தேசத் துரோக வழக்கா? வலுக்கும் கண்டனம்!

Published On:

| By Balaji

இஸ்லாமியர்கள், தலித்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘கடிதம் எழுதியதற்காக தேசத் துரோக வழக்கு போடப்படுமா’ என்று அதிர்ச்சியடைந்த தலைவர்கள், இதைக் கண்டித்ததோடு வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றனர்.

**திமுக தலைவர், ஸ்டாலின்**

வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி போன்ற கலை – அறிவுலகச் சான்றோர்களை எல்லாம் தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்த நினைப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. சமூக அக்கறை உள்ள அத்தகைய முன்னோடிகளை தேசத் துரோகிகள் என்று சொல்வதைவிடப் பேரபாயம் வேறு எதுவும் இருக்க முடியாது.

அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களாக இருக்கும், மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் நிலைநாட்டுங்கள் என்று கூறுவது, எப்படி தேசத் துரோகமாகும்? பாஜக அரசின் எதிர்மறைச் செயல்பாடுகள் பற்றிப் பேசவிடாமல் வாய்ப்பூட்டு போடும் இந்த முயற்சி கண்டனத்துக்குரியது. மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசு, இதனை உணர்ந்து, 49 பேருக்கு எதிரான தேசத் துரோக வழக்கை உடனடியாகத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

**மதிமுக பொதுச் செயலாளர், வைகோ**

ஜனநாயக நாட்டில், கருத்து உரிமையைப் பறிப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுவோரை ‘தேசத் துரோகிகளாக’ சித்திரிப்பதும் பாசிசத்தின் அடையாளம் ஆகும். இத்தகைய போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும். ‘ராம்’ என்கின்ற பெயர், இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு மிகவும் புனிதமானது. அந்தப் பெயரை வன்முறைக்காகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும்; அதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

**மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்**

வன்முறைகளையும், கொலைகளையும், சட்டவிரோதச் செயல்களையும் தடுத்து நிறுத்த வேண்டிய அரசு மவுனமான நிலையில் இருக்கும்போது, அரசியல் சட்டத்தின் மீது அக்கறையும், ஜனநாயகத்தின் மீது மதிப்பும் கொண்டவர்கள் இச்செயல்களை விமர்சிப்பதும், கண்டிப்பதும், நடவடிக்கை எடுக்க பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும் தேசபக்த செயலே. இவற்றை கொண்டாடுவதற்கும், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் பதிலாக, கடிதம் எழுதியவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் மீதான கொடூரத் தாக்குதலாகும்.

**இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர், முத்தரசன்**

49 பேரின் கடிதத்துக்குப் பிரதமரிடமிருந்து பதில் வருவதற்கு மாறாக, கடிதம் எழுதியது குற்றம், அவர்கள் அனைவரும் தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்தி வழக்கு பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. பிரதமருக்குக் கடிதம் எழுதியதற்காக தேசத் துரோக குற்றம் சுமத்தி வழக்கு பதிவு செய்திருப்பது என்பது எந்த ஓர் ஆட்சியிலும் நடந்ததாகத் தெரியவில்லை. நாட்டில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சியா அல்லது சர்வாதிகார ஆட்சியா என்ற ஐயப்பாட்டை இவ்வழக்கு ஏற்படுத்தியுள்ளது.

**விசிக தலைவர், திருமாவளவன்**

இது பாஜக ஆட்சி ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்குவதற்குச் சான்றாகும். இதுபோன்ற செயல்களால் இந்திய குடிமக்கள் வெட்கித் தலைகுனியவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவை ஆங்கிலேயோ்கள் ஆட்சி செய்தபோதுகூட இத்தகையை நிலை இருந்ததில்லை. எனவே திரையுலகப் பிரமுகா்கள்மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

**பாமக இளைஞரணித் தலைவர், அன்புமணி**

“பிரபலமான 50 நபர்கள், பிரதமருக்குக் கடிதம் எழுதி இருக்கின்றனர். அவ்வளவுதான் அவர்கள் செய்தது. யார் வேண்டுமானாலும் பிரதமருக்குக் கடிதம் எழுதலாம். இது ஜனநாயக நாடு. அவர்கள் செய்ததெல்லாம் கடிதம் எழுதி, ஒரு கோரிக்கை வைத்ததுதான். அதிலென்ன தவறு? நிச்சயமாக அந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்

இந்த நிலையில், 49 பேருக்கு ஆதரவாக ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share