நேற்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீது கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து, வைகோ, வேல்முருகன் உட்பட தமிழக அரசியல்கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று (நவம்பர் 13) மாலை ராமேஸ்வரம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிச்சை ஆரோக்கியதாஸ் மற்றும் ஜான்சன் ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டது. அவர்களது படகுகளை துளைத்த குண்டுகளைச் சேகரித்திருக்கின்றனர் மீனவர்கள். ஆனால், இந்திய கடலோர காவல்படை தாக்குதல் நிகழவில்லை என்று மறுத்திருக்கிறது.
இதுவரை இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு, மீன்வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களையும் படகுகளையும் பறிகொடுத்தனர் தமிழக மீனவர்கள். அதோடு, சிறைவாசத்தையும் அனுபவித்தனர். இந்த நிலையில், இந்திய கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்தியது ‘வேலியே பயிரை மேயும் செயல்’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார் மதிமுக தலைவர் வைகோ.
”இந்தியக் கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துகின்ற அளவுக்குத் துணிந்ததற்கு, தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இந்திய அரசினுடைய அலட்சியமும், இந்திய நாட்டுக் குடிமக்களான மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்வு துளியும் இல்லாததுதான் முக்கியக் காரணம்.
இதுவரை இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வதை இந்தியக் கடற்படை வேடிக்கை பார்த்தது. தற்போது இந்தியக் கடலோர காவல்படையினரே தமிழக மீனவர்களைத் தாக்கியது மன்னிக்க முடியாத குற்றமாகும். மத்திய அரசுக்கு என் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்” என்றவர், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இந்திய கடலோரக் காவல்படையினரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென வற்புறுத்தியிருக்கிறார்.
இந்த தாக்குதலைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி.வேல்முருகன் தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
” கடற்தொழிலையே கைவிடச் செய்வதற்கான நிலையை ஏற்படுத்தவே இந்தத் தாக்குதல் என்பதுதான் கடைசியாகத் தெரியவந்திருக்கும் உண்மை. அதன் அடிப்படையிலேயே இந்திய கடற்படையே தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது.
கைகளை மேலே தூக்கியபின் எந்தப் படையினரும் சுடுவதில்லை என்பதுதான் சர்வதேச நியதி. இதற்கு உலகில் ஒரே விதிவிலக்கு சிங்களப் படையினர்தான். அதே சிங்களப் படையினரைப் போலவே இந்தியக் கடற்படையினரும் நடந்துகொண்டுள்ளனர்.
இலங்கை கடற்படையின் தாக்குதலினின்றும் இதுவரை ஒரு முறைகூட தமிழக மீனவரைப் பாதுகாத்ததில்லை இந்தியக் கடற்படை. இது ஏன் என்பதற்கான விடை இன்று கிடைத்திருக்கிறது, சொந்த நாட்டு மக்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம்!
ஏற்கனவே கார்ப்பரேட்டுகளுக்காகவே மோடி ஆட்சி நடத்துவதை, அவர் எடுத்த நடவடிக்கைகளே சொல்வதாக இருக்கின்றன. இப்போது கடலையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கவே செயற்கையாக மீனவர் பிரச்சனையை நீட்டித்து வருகிறார் என்பது புலனாகிறது.
இல்லை என்றால் இந்திய கடற்படையே தமிழக மீனவரை சுட்டிருப்பதற்கு என்னதான் பொருள்? இதற்கான பதிலை தமிழக முதல்வர் பழனிச்சாமியிடமிருந்தும் எதிர்பார்க்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி” என்றிருக்கிறார்.
இலங்கை கடற்படை தாக்குதலில் மீனவர் பிரிட்ஜோ சமீபத்தில் மரணமடைந்தார். இந்த நிலையில், மேலும் ஒரு தாக்குதலைச் சந்தித்திருக்கின்றனர் தமிழக மீனவர்கள்.�,