எஃகுத் துறையினருக்கு வங்கிகள் வழங்கும் கடன் முதன்முறையாக இந்த ஆண்டில் சரிவைச் சந்தித்துள்ளது.
2008ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு இந்த ஆண்டில்தான் எஃகுத் துறையினருக்கான கடன்கள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. ஜூன் 22 வரையிலான 12 மாதங்களில் எஃகுத் துறையினருக்கான வங்கிகளின் கடன் தொகை 6.5 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக *டி.என்.ஏ. மணி* ஊடகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது இந்த ஆண்டில், எஃகுத் துறையினருக்கு வங்கிகள் வழங்கிய கடன் தொகை ரூ.3,00,500 கோடி மட்டுமே. ஆனால், சென்ற ஆண்டின் இதே காலம் (ஜூன் 22) வரையில் எஃகுத் துறைக்கு ரூ.3,21,300 கோடி கடன் வழங்கப்பட்டிருந்தது. இது ரூ.20,800 கோடி குறைவாகும். நீண்ட காலத்துக்குப் பிறகு இந்த ஆண்டில்தான் வங்கிகளின் கடனுதவி சரிவைச் சந்தித்துள்ளதாக எஃகுத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாகவே இந்திய வங்கிகள் அனைத்தும் வாராக் கடன் பிரச்சினைகளால் தவித்து வருவதால், கடன் வழங்குவதை வங்கிகள் குறைத்துக்கொண்டுள்ளன. இந்த ஆண்டின் மார்ச் – ஜூன் காலத்தில் எஃகுத் துறைக்கான வங்கிக் கடன்கள் 7.5 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால் சென்ற ஆண்டின் இதே காலத்தில் 4.1 சதவிகிதம் கூடுதலான அளவில் கடன்கள் வழங்கப்பட்டிருந்தன. 2013ஆம் ஆண்டில் எஃகுத் துறைக்கான வங்கிக் கடன்கள் 19.2 சதவிகிதம் அதிகரித்திருந்தது. இதனால் வங்கிகளுக்கு இழப்புகளும் ஏற்பட்டது. இந்திய வங்கிகளின் வாராக் கடன்களில் எஃகுத் துறையினர்தான் பெரும் பங்கு வகிக்கின்றனர். மறுபுறமோ, தங்களது தொழில் நடவடிக்கைகளுக்குத் தேவையான கடனுதவி போதிய அளவில் கிடைப்பதில்லை என்று எஃகுத் துறையினர் புகார் தெரிவிக்கின்றனர்.
உலக அளவில் எஃகு உற்பத்தியில் சீனா, ஜப்பானைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவுக்கு, வங்கிக் கடன் பிரச்சினையால் எதிர்காலத்தில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.�,