அடுத்து ஆட்சிக்கு வரப்போகும் அரசின்முன் இருக்கும் பொருளாதார சவால்கள், அவற்றைப் புரிந்து கொண்டு தகுந்த தீர்வுகளை வடிவமைப்பது எப்படி என்பதுபற்றிய விவாதத்தை இந்தியாவைச் சேர்ந்த 13 பொருளாதார நிபுணர்கள் துவக்கியுள்ளனர். பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களையும்,பிரச்சனைகளையும் ஆராய்ந்து பார்த்து, “What the Economy Needs Now” எனும் தலைப்பில் 14 கட்டுரைகள் கொண்ட ஒரு தொகுப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தொகுப்பின் இறுதியில், இந்தியப் பொருளாதாரம் சந்திக்கும் எட்டு தலையாய சவால்கள், அவற்றைக் கையாள்வது எப்படி என்பதை விவாதிக்கும் சிறு கட்டுரை ஒன்று உள்ளது. இந்தியாவின் நிதிநிலையைப் பற்றி அது என்ன சொல்கிறது என்று பார்ப்போம். நடுவணரசு, மாநில அரசுகளின் மொத்த நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) தொடர்ந்து அதிகரிப்பதால், தனியார் முதலீடுகளை மேற்கொள்வதற்காகத் தேவைப்படும் சேமிப்புகளின் அளவு குறைவதாகவும், அதிக வட்டிக்கே அவை கிடைப்பதாகவும் அக்கட்டுரை வருத்தம் தெரிவிக்கிறது.
அது பார்க்கத் தவறுவது என்னவென்றால், வாராக்கடன் பிரச்சனை (Bad-loan problem) காரணமாக வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியே வைத்துள்ளனர் என்பதையும், வாங்கிய கடனைத் திருப்பித்தர முடியாததால் தனியார் பெருநிறுவனங்கள் மேலும் கடன் வாங்கி முதலீடு செய்யமுடியாத
நிலையில் உள்ளனர் என்பதையும்தான். தனியார் முதலீடுகள் இல்லாதபோது அரசுதான் செலவு செய்து பொருளாதாரத்தில் கிராக்கியின் அளவு குறையாமல் இருப்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசு செய்யும் அனைத்து செலவுகளும் நேர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்று சொல்வதற்கில்லை. ஆனால், தனியார் முதலீடுகளில் தொய்வு ஏற்படும்போது அதை சரிசெய்யும், அதே வேளையில், பொருளாதார இயந்திரத்தை செலுத்தவும் அரசு கடன்
வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அடுத்ததாக, மாநில அரசுகள் பொறுப்பில்லாமல் கடன் வாங்குவதால்தான் அவற்றின் நிதிப்பற்றாக்குறை அதிகரித்து வருவதாக இக்கட்டுரை குற்றம்சாட்டுகிறது. மாநில அரசுகளும் சந்தையில்தான் கடன் வாங்க வேண்டும். ஒருவேளை வாங்கிய கடனை அவை திருப்பித்தரத் தவறினால், நடுவணரசு இடையீடு
செய்து அக்கடனை செலுத்திவிடும் எனும் உத்தரவாதம் இருப்பதால்தான் மாநில அரசுகள் தொடர்ந்து குறைந்த வட்டிக்கே கடன் வாங்க முடிகிறது எனும் வாதம் முன்வைக்கப்படுகிறது.
14ஆவது நிதிக்குழு வரிவருமானப் பகிர்வில் மாநிலங்களின் பங்கை உயர்த்தியதும், ஒன்றிய அரசின் திட்டங்களை (Centrally Sponsored Schemes) செயல்படுத்துவதற்கு மாநிலங்களுக்கு நடுவணரசு தான் அளித்துவந்த பங்கைக் குறைத்துக் கொண்டது. இதனால் மாநில அரசுகளின் நிதிச்சுமை அதிகரித்தது. ‘நிபந்தனைகள் அற்ற நிதியின் பங்கு மாநிலங்களுக்கு அதிகரித்துள்ளது; அவர்களால் சுதந்திரமாகச் செலவு செய்ய முடியும்’ என்று ஒன்றிய அரசு சொல்லும் அதேவேளையில், திட்டங்களுக்கு செய்யும் செலவில் தன்னுடைய பங்கைக் குறைத்ததோடு மட்டுமில்லாமல், ஜிஎஸ்டி எனும் வரி விதிப்பு முறையையும் கொண்டுவந்து மாநில அரசுகளின் நிதிச் சுதந்திரத்தையும் (Fiscal autonomy) பெருமளவிற்கு குறைத்துள்ளது.
ஜிஎஸ்டி அமலாக்கத்தால், தங்களுடைய மொத்த வருவாயில் வெறும் 35 விழுக்காடு
வருவாயை மட்டும்தான் மாநிலங்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகள் அதிகமாகக் கடன் வாங்குகின்றன என்று சொல்லும்போது, செலவு செய்யும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு அதிகமாக இருப்பினும், அவற்றின் நிதிச்சுமை அதிகமாகவும், நிதிச் சுதந்திரம் குறைவாகவும் உள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.
�,”