கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் முதல்கட்டமாக குடிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் தேதியன்று தமிழகத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்கியது கஜா புயல். நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர், மின்சாரம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இப்பகுதிகளில் உடனடியாக மின்விநியோகம் அளிக்கப்படும் வகையில், சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 13,000 மின்வாரிய ஊழியர்கள் களத்தில் ஓய்வே இல்லாமல் பணி செய்துவருகின்றனர்.
இந்த ஊழியர்கள் தங்குவதற்குச் சமுதாயக்கூடங்கள், திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் மட்டும் செல்போனுக்கு சார்ஜ் போட்டுக்கொள்ளவும், வெளிச்சத்துக்கு லைட் போட்டுக்கொள்ளவும், ஃபேன் வைத்துக்கொள்ளவும் மட்டுமே இவர்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில் பணியாற்றிவரும் மின்வாரிய ஊழியர்கள் சிலரைச் சந்தித்துப் பேசினோம்.
கஜாவினால் ஏற்பட்ட பாதிப்பு, தானே புயலைவிட 10 மடங்கு அதிகமானது. மக்களுக்கு மின்சாரம் கொடுக்கத் தயார் நிலையில் மின் கம்பங்கள், கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், எங்கள் வேலையும் வேகமாக நடக்கிறது” என்றார் ஒரு ஊழியர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியிலுள்ள சேந்தமங்கலத்தைச் சேர்ந்த கண்ணனிடம் கஜா புயல் பாதிப்பு பற்றிக் கேட்டோம். “எங்கள் பகுதி பலாப்பழம்தான் மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. பண்ருட்டி பலாவைப் போல இதுவும் ருசியானது. அப்படிப்பட்ட பலா மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. தென்னை, வாழை போன்ற வாழ்வாதாரங்களை இழந்து நிற்கிறோம். குடிநீர் இல்லாமல், ஜெனரேட்டர் வைத்து குடிநீர் டேங்குகளை நிரப்பிக்கொள்கிறோம். டீசல் அலவன்ஸ் என்று ஒரு டேங்குக்கு 10
லிட்டர் டீசல் கொடுத்து, இரண்டு மூன்று நாட்களுக்குப் பயன்படுத்தச் சொல்கிறது அரசாங்கம். அது போதுமானதாக இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
நாகை மாவட்டத்தில், முதல்கட்டமாக குடிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. “கூடுதல் மாவட்ட மேற்பார்வையாளரும் வேளாண்மைத் துறை செயலாளருமான ககன்தீப்சிங் பேடியின் முயற்சியால் கடலூர், விழுப்புரம் உட்பட மற்ற
மாவட்டங்களிலுள்ள திட்ட அலுவலர்களின் உதவிகள் பெறப்பட்டன. இதன் மூலமாக ஜெனரேட்டர், குடிநீர் டேங்க் லாரிகள் ஜேசிபி, சார்ஜர் பேட்ரிகள் போன்றவற்றை இரவோடு இரவாக குடிநீர் இல்லாத ஊர்களுக்கு அனுப்பப்பட்டன. ஜெனரேட்டர்களை அனுப்பி போதுமான
அளவுக்கு டீசல் நிரப்பி குடிநீர் பிரச்சினைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால்,
மக்களின் கோபம் தணிந்து வருகிறது” என்றார் ஒரு அதிகாரி.
நாகை மாவட்டத்தைப் போலவே திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும்
வெளி மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட ஜேசிபி மூலமாகச் சாலையில்
விழுந்து கடக்கும் மரங்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன.
அதே நேரத்தில், மின் இணைப்புகளை மாவட்டம் முழுவதும் சரிசெய்ய இன்னும் 15 நாட்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கின்றனர் அரசு அதிகாரிகள்.
**-காசி**
�,”