சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் ஓலைச் சுவடிகள் குறித்து நடைபெறவுள்ள 5 நாள் இலவச பயிலரங்கத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் இலக்கியம் மற்றும் சுவடியியல் புலம் சார்பில் தமிழ் ஓலைச் சுவடிகள் குறித்த பயிலரங்கம் டிசம்பர் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடக்க உள்ளது. சுவடிகளைப் பாதுகாப்பது, படியெடுப்பது, பதிப்பிப்பது ஆகியவை குறித்து இந்தப் பயிலரங்கில் கற்றுத் தரப்படும். இதற்குக் கட்டணம் எதுவும் இல்லை. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிலரங்கம் நடைபெறும். இந்த 5 நாட்களிலும், பங்கேற்பாளர்களுக்கு மதிய உணவு, 2 வேளைத் தேநீர் வழங்கப்படும்.
தமிழ் இலக்கியம், பண்பாடு, வரலாறு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்லூரி ஆசிரியர்கள் கலந்துகொள்ளலாம். தமிழ்ச் சுவடியியல், பதிப்பியல் பட்டய வகுப்பு முடித்தவர்கள், படித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை. ஆய்வுத் தலைப்பை அடிப்படையாகக் கொண்டு 40 பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இதில் கலந்துகொள்ள விரும்புவோர் www.ulakaththamizh.org என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த படிவத்தை workshopiits@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் அல்லது நேரில் அளிக்க வேண்டும். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 9445876240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.�,