தென் ஆப்ரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படும் டேவிட் மில்லர் முதல் தர டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்காக அனைத்து நாடுகளும் முழுவீச்சில் தாயாராகி வருகின்றன. இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காக முதல் தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் டேவிட் மில்லர் நேற்று அறிவித்துள்ளார். இந்த முடிவையடுத்து தென் ஆப்ரிக்க அணிக்காக இனி அவரால் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியாது.
இதுகுறித்து பேசிய மில்லர், இது மிகவும் கடினமான முடிவு. எனக்கு எப்போதும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது பிடிக்கும். குறுவடிவ போட்டிகளில் கவனம் செலுத்தி என் விருப்பத்திற்கேற்ப ஆடவே இந்த முடிவை எடுத்துள்ளேன். உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வரவிருப்பதால் எனது இந்த முடிவு மிகவும் முக்கியமானது. டால்பின்ஸ் அணி பங்கேற்கும் அனைத்து குறுவடிவ உள்ளூர் தொடர்களிலும் பங்கேற்று கோப்பை வெல்ல என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
29 வயதாகும் மில்லர் 2008ஆம் ஆண்டு முதல் தர போட்டிகளில் அறிமுகமாகி, இதுவரை 36.32 சராசரியுடன் 3342 ரன்கள் எடுத்துள்ளார். 2016-17 சீசனில் லயன்ஸ் அணிக்கு எதிராக அதிகபட்சமாக 177 ரன்கள் அடித்திருந்தார். தென்னாப்பிரிக்க அணியில் குறுவடிவ ஆட்டத்திற்கு பெயர் போன மில்லர், ஒருநாள் போட்டிகளில் 2588 ரன்களையும், டி20 போட்டிகளில் 1084 ரன்களையும் கடந்துள்ளார்.�,”