நியூசிலாந்தின் முக்கிய ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக அறியப்பட்ட கிரான்ட் எலியட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் டி20 ப்ளாஸ்ட் தொடரில் பர்மிங்கம் பியர்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிரான்ட் எலியட், அவரது அணி இத்தொடரின் நாக்-அவுட் சுற்றிலிருந்து வெளியேறியதையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார். 1996ஆம் ஆண்டு தொடங்கிய இவரது கிரிக்கெட் பயணத்தில் 83 சர்வதேச ஒருநாள் ஆட்டங்கள், 211 முதல்தர ஆட்டங்கள் மற்றும் பல்வேறு அணிகளுக்காக 150 டி20 ஆட்டங்களில் பங்கேற்றிருக்கிறார். தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கில் தொடங்கிய தனது கிரிக்கெட் பயணம் நியூசிலாந்தில் முடிவடைந்துள்ளதாக எலியட் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஓய்வு குறித்து, எனது 12ஆவது வயதில் என் வாழ்வின் லட்சியங்கள் குறித்து டைரியில் எழுதிய அந்த நாளை நான் இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன். உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது, சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது, கவுண்டி போட்டிகளில் விளையாடுவது இவற்றைத்தான் அப்போது என் லட்சியங்களாகக் கருதினேன். 27 ஆண்டு பயணத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து ரசித்து விளையாடினேன். இதில் என்னுடன் பயணம் செய்து, மறக்கமுடியாத பல அனுபவங்களைத் தந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தென்னாப்ரிக்காவுடனான ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய போட்டியில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார். எலியட் நியூசிலாந்து அணிக்காக இதுவரை 83 போட்டிகளில் விளையாடி 2 சதம், 11 அரைசதம் உட்பட 1976 ரன்களையும்; பந்துவீச்சில் 39 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார்.�,”