மத்திய அரசின் முதியோர் ஓய்வூதியத் திட்டமான ‘அடல் பென்சன் யோஜனா (ஏ.பி.ஒய்.)’ திட்டத்தின் சேவையை இனி சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் பேமன்ட் வங்கிகளிலும் பெறலாம் என்று மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், முதியோர் ஓய்வூதிய விநியோகத்தை அதிகரிக்கவும் இத்திட்டத்தில் சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் பேமன்ட் வங்கிகள் ஆகியவற்றை இணைத்துள்ளோம். இதன்மூலம் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெறுவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறியுள்ளது. இதன்படி, இத்திட்டத்தில் 11 பேமன்ட் வங்கிகள் மற்றும் 10 நிதி நிறுவனங்களை இணைக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதில் உஜ்வான், ஜனலக்ஷ்மி, ஈகுட்டாஸ் ஆகிய நான்கு பேமன்ட் வங்கிகளும் அடங்கும். ஏர்டல் பேமன்ட் வங்கி மற்றும் பேடிஎம் பேமன்ட் வங்கி இதற்கான செயல்பணிகளை தொடங்கிவிட்டன.
2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி ஏ.பி.ஒய். திட்டத்தை அறிமுகம் செய்தார். இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து குடிமக்களும் இணைந்து பயன்பெறலாம். ரூ.1000 முதல் ரூ.5000 வரை இத்திட்டத்தில் மாதம் செலுத்த வேண்டும். 60 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கப்படும். இதுவரையில் 84 லட்சம் சந்தாதாரர்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். இதன் மொத்த சொத்து மதிப்பு ரூ.3,194 கோடியாகும்.
முன்னதாக கடந்த மாதத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்துவது குறித்து கருத்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் ஏ.பி.ஒய். திட்டத்தில் சிறு நிதி நிறுவனங்களை இணைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.�,”