}ஓடும் விமானத்தில் பார்வர்டு பிளாக் போராட்டம்!

Published On:

| By Balaji

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரை சூட்ட வேண்டுமென ஓடும் விமானத்தில் பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கம் பெயரை சூட்டக்கோரிக் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு தேவர் அமைப்புகள் இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து மாநிலங்களவையிலும் விவாதம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஓடும் விமானத்தில் பார்வார்டு பிளாக் கட்சியினர் இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையிலிருந்து இன்று பகல் 12.55 மணிக்கு கிளம்பிய இண்டிகோ விமானத்தில் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் முருகன்ஜி தலைமையில் 12 பேர் ஏறியுள்ளனர்.

விமானம் திருச்சியைக் கடக்கும்போது எழுந்த அவர்கள், முத்துராமலிங்கம் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்கக் கோரி நடு விமானத்தில் கோஷம் எழுப்பினர். இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறி விமானத்தில் இருந்த ஊழியர்கள் சென்னை விமான நிலையம் மற்றும் மதுரை விமான நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விமானம் மதுரையை வந்தடைவதற்கு முன்பே மதுரை காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் சிறப்புப் பிரிவினர் மதுரை விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.

சரியாக 2.10 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் வந்தது. பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக ஒரு அறைக்கு அழைத்து வந்த காவல்துறையினர், விமானத்தில் போராட்டம் செய்தவர்களில் 8 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். கைது செய்யும்போதும் அவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.

அவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகவே [காணொளி](https://www.youtube.com/watch?v=N0Ajgb2iwtc) ஒன்றை பேசி வெளியிட்டுள்ளனர். அதில், “உலக நாடே உற்றுப் பார்க்கும் வகையில், ஒரு மிகப்பெரிய விஷப் பரீட்சையை மேற்கொள்ளக் களத்தில் நிற்கிறோம். இன்னும் ஒரு மணி நேரத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சி வெடிக்கப் போகிறது. சென்னையிலிருந்து மதுரை செல்கிற விமானத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரை உலகம் முழுக்க கொண்டுசெல்லவுள்ளோம்” என்று கூறியுள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share