ஒரு வெற்றி, உலகக்கோப்பையை சாத்தியமாக்கிவிடுமா?

Published On:

| By Balaji

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லக்கூடிய கிரிக்கெட் அணி எதுவாக இருக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் முன்னணி சுழ்ற்பந்து வீச்சாளர் க்ரீம் ஸ்வான் கணித்துள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடக்க இருக்கிறது. இது மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பையை இங்கிலாந்து அணியே வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என கணித்துள்ளார் ஸ்வான். பிபிசிக்கு சில தினங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியொன்றில் பேசிய அவர், “இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இல்லாமலே, ஆஸ்திரேலிய அணியிடம் இங்கிலாந்து சிறப்பாக ஆடியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு வானமே எல்லை என்கிற அளவுக்கு சிறப்பாக ஆடிவருகிறது. இதனால் இதுவரை ஒருநாள் உலக கோப்பையை வெல்லாத அணியான இங்கிலாந்து அணி, அடுத்த உலக கோப்பையை வெல்லும்” என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி அனைத்துப் போட்டியிலும் அசாத்தியமாக விளையாடி தொடரை 4-0 என கைப்பற்றி இருப்பதுடன் ஆஸ்திரேலியாவை வொயிட் வாஷ் செய்ய முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக மூன்றாவது போட்டியில் 481 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்திருந்ததுதான் இங்கிலாந்து அணியை பலரும் திரும்பிப் பார்க்கும்படி செய்துள்ளது.

இதைக் கருத்தில்கொண்டுதான் ஸ்வானும் இங்கிலாந்து கோப்பையை வெல்லும் எனக் கணித்திருப்பார் எனத்தெரிகிறது. இங்கிலாந்தில் உலகக்கோப்பை நடப்பது அந்த அணிக்கு சாதகமே. அதேநேரம் ஒரு தொடரை வைத்தோ ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவிப்பதை வைத்தோ மட்டும் ஒரு அணி உலகக்கோப்பையை வென்று விடும் எனக் கணித்து விட முடியாது. உதாரணமாக, 2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா இடையே நடந்த போட்டியில் 434 ரன்கள் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எனும் உலகசாதனை படைத்தது ஆஸ்திரேலியா. ஆனால் அந்தப் போட்டியிலேயே 438 ரன்கள் அடித்து சேஸ் செய்து அடுத்த சில மணி நேரத்திலேயே உலக சாதனையைத் தூள் தூள் ஆக்கியது தென் ஆப்பிரிக்கா.

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த அணி எனும் சாதனையையும் கைப்பற்றியது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டான 2007இல் நடந்த உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவால் இறுதிப்போட்டிக்கே செல்ல முடியவில்லை. (அந்தக் கோப்பையை அடிவாங்கிய ஆஸ்திரேலியாதான் கைப்பற்றியது என்பது தனிக்கதை)

அதுபோல 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியே வந்த அணிதான் இந்தியா; அதில் அடுத்த சுற்றுக்கும் சென்று வந்த அணிதான் இங்கிலாந்து. ஆனால் அதன்பின் 2008இல் நடந்த இந்தியா- இங்கிலாந்து தொடரில் 5-0 என இங்கிலாந்து அணியை துவம்சம் செய்து வென்றது அதே இந்தியாதான். எனவே இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல எந்த அளவிற்கு தகுதியான அணி என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share