மகப்பேறு விடுப்பு வேண்டாம் என்று கூறி, நேற்று முன்தினம் (ஏப்ரல் 13) காலை மீண்டும் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார், ஶ்ரீஜனா ஐஏஎஸ்.
கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுக்க மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் அறிவித்துள்ளார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் காவல் துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் என மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் துறையினர் தொடர்ந்து மக்களின் நலனுக்காகப் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையர் ஶ்ரீஜனா கும்மாலாவின் செயல்பாடு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2013ஆம் ஆண்டு ஐஏஏஸ் தேர்ச்சி பெற்று, விசாகப்பட்டினத்தில் தன்னுடைய பணியைத் தொடங்கிய ஶ்ரீஜனா, கடந்த ஒரு மாத காலமாக மகப்பேறு விடுப்பில் இருந்தார். இன்னும் ஐந்து மாத காலம் அவருக்கு விடுப்பு உள்ளது.
தற்போது, கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்துள்ளதால், ‘விடுப்பு வேண்டாம்’ என்று கூறி தன் குழந்தையோடு வந்து மீண்டும் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “எனக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. நான் நலமுடன் இருக்கிறேன். நாடு இக்கட்டான சூழலில் இருக்கிறது. என் மக்களுக்கும் மாநகராட்சிக்கும் என் உதவி நிச்சயம் தேவைப்படும். இந்த நேரத்தில், என் உடல்நலன் கருதி சுயநலமாக என்னால் வீட்டில் இருக்க முடியாது. என் அலுவலகத்தில் எல்லோரும் ஓடி ஓடி இரவு பகலாய் உழைக்கும்போது, நான் என் குழந்தையைக் காரணம் காட்டி ஓய்வெடுக்க விரும்பவில்லை. மனிதனுக்கு மனிதன் உதவவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சேர்ந்து செயல்படுவோம்” என்று கூறியுள்ளார்.
ஶ்ரீஜனாவின் இந்த செயல்பாட்டுக்காக, பொதுமக்கள் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்துவரும் சூழலில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தன்னுடைய சமூக வலைதளத்தில், “அரசு ஆறு மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கியுள்ள நிலையில், விசாகப்பட்டினம் ஆணையர் ஒரே மாதத்தில் மீண்டும் பணிக்குச் சேர்ந்தது ஆச்சர்யத்தை அளிக்கிறது. அவரின் சேவையுணர்வில் நான் வியந்துபோனேன். ஶ்ரீஜனா பாராட்டுக்குரியவர். ஒரு பெண் சாதாரணமானவள் அல்ல என்பதை ஶ்ரீஜனா நிரூபித்துவிட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.
**ராஜ்**�,