;ஒரு மாணவி, ஓர் ஆசிரியை!

Published On:

| By Balaji

கோவை அருகேயுள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் இந்தக் கல்வியாண்டில் மூன்றாம் வகுப்பில் ஒரே ஒரு மாணவி உள்ளார். அவருக்குப் பாடம் கற்பிக்க ஓர் ஆசிரியை உள்ளார். இது மிகவும் கவலையளிக்கிறது.

மெட்ரிக் பள்ளிகளின் வருகையடுத்து, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. தனியார் பள்ளிகளும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகின்றன. இதற்குப் போட்டியாக அரசுப் பள்ளிகளிலும் பல்வேறு வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இன்னும் ஒருசில பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை கைவிரல் விட்டு எண்ணுமளவுக்குத்தான் இருக்கிறது.

அந்தவகையில் கோவை மாவட்டம் வால்பாறை சின்கோனா அருகேயுள்ள சின்னக்கல்லார் பகுதியில் 1948ஆம் ஆண்டு அரசினர் ஆதிதிராவிடர் நலப் பள்ளி தொடங்கப்பட்டது. இங்கு, ஆரம்பத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். ஆனால், தற்போது மாணவர்களின் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இந்நிலையில், 2017-18ஆம் கல்வியாண்டில் மூன்றாம் வகுப்பில் கீர்த்தனா என்ற ஒரே ஒரு மாணவி மட்டுமே படித்து வருகிறார். மற்ற வகுப்புகளில் மாணவர்களே இல்லை. கீர்த்தனாவுக்குக் கற்பகவள்ளி என்ற ஒரே ஆசிரியை உள்ளார். ஒரு மாணவிக்காகச் சத்துணவு மையமும் செயல்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்ட போதிலும், இந்தாண்டில் மாணவர் யாருமே சேரவில்லை. இதனால், இந்தப் பள்ளி மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது.

இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சின்னக்கல்லார் பகுதியில் வசித்து வந்த பெரும்பாலான மக்கள் சமவெளி பகுதியில் குடியேறி விட்டனர். தற்போது இந்தப் பகுதியில் 34 வீடுகள் மட்டுமே உள்ளன. இங்குள்ள மாணவர்கள்கூட வால்பாறையிலுள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிகள் எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share