நீங்கள் கவனிக்கிறீர்களா?
கவனம் என்பது என்ன? ஒரு பொருளை, ஓர் இடத்தைப் பார்க்கையில் நாம் எந்த அளவுக்கு அதைக் கவனிக்கிறோம்?
உங்கள் மேசை மீது இருக்கும் நோட்டுப் புத்தகத்தின் பின்னட்டையில் இருக்கும் படம் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?
உங்கள் வீட்டு நாட்காட்டியில் வலது பக்கம் மேலே சிறியதாக ஒரு படம் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?
ஓர் அலுவலகத்துக்குச் செல்கிறீர்கள். அங்கே வரவேற்பறையில் நீங்கள் கண்டவற்றை ஒரு தாளில் எழுதிப் பாருங்கள். மீண்டும் அந்த இடத்துக்குச் சென்று நீங்கள் எழுதியவற்றைச் சரி பாருங்கள்.
நாம் எந்த அளவுக்குக் கவனிக்கிறோம்? எந்த அளவுக்கு நம் சூழலை, அனுபவங்களை, தகவல்களை உள்வாங்குகிறோம்? எல்லாமே கவனத்தில்தான் இருக்கின்றன.
எதைக் கவனிக்கிறோம் என்பது ஒருபுறம் இருக்க, எப்படிக் கவனிக்கிறோம் என்பதும் முக்கியம். கடற்கரையில் கால் நனைக்கும்போது அலைகளைப் பார்க்கிறீர்கள். அப்போது தூரத்தில் இருக்கும் படகு, கப்பல், வேறு சில அம்சங்கள், அடிவானம் ஆகியவற்றைப் பாருங்கள். அவற்றைப் பார்த்துக்கொண்டே இருக்கும்போது உங்கள் மனம் என்ன செய்கிறது?
காட்சியில் லயிக்கிறதா அல்லது வேறு சிந்தனைகளில் மூழ்குகிறதா?
சின்ன வயதில் இதே கடற்கரைக்கு வந்த நினைவு வருகிறதா? இந்த இடத்துக்கு உங்கள் தோழன் அல்லது தோழியுடன் வரவில்லையே என நினைத்து ஏங்குகிறீர்களா?
அந்தக் காட்சியைப் பற்றிப் பிறருக்கு எப்படி விளக்குவது என்று யோசிக்கிறீர்களா?
வெள்ளம், சுனாமி போன்ற நினைவுகள் வருகின்றனவா?
ஒரு பாடலைக் கேட்கும்போது இதேபோன்ற பாடலை, இதே போன்ற மெட்டை எங்கேயோ கேட்டிருக்கிறோம் என்று தோன்றுகிறதா?
ஒரு பூவைப் பார்க்கும்போது வேறு பூக்கள் நினைவுக்கு வருகின்றனவா?
உணவு, வாசனை, நிகழ்ச்சிகள், சந்திப்புகள், அனுபவங்கள் இவற்றின்போதும் இப்படிப்பட்ட எண்ணங்கள் வருகின்றனவா?
இவற்றில் எதில் உங்கள் மனம் ஈடுபட்டாலும் அதைக் கவனம் என்று சொல்ல முடியாது.
பூவைப் பார்க்கும்போது பூவைத் தவிர வேறு ஏதாவது நம் நினைவுக்கு வந்தால் நாம் பூவைக் கவனிக்கவில்லை என்று பொருள்.
கடல், மலை போன்ற காட்சிகளைப் பார்த்தல், இசை, உணவு, பயணம் போன்ற அனுபவங்களுக்கு ஆளாகுதல், பேச்சு, வேலை, உறவைப் பேணுதல் எனப் பல விதமான செயல்பாடுகள்….
இப்படி எதை எடுத்துக்கொண்டாலும் அதில் எந்த அளவும் நம் மனம் முழுமையாக ஒன்றுகிறது என்பதுதான் முக்கியம். அப்படி ஒன்றுதல்தான் கவனம்.
ஆழமான கவனம் இருக்கும் இடத்தில் பிற எண்ணங்கள் வராது. வேறு எண்ணங்களின் குறுக்கீடு அற்ற கவனம்தான் உண்மையான கவனம்.
அர்ச்சுனன் அம்பை எய்தும்போது தன் இலக்கின் மீது அவனுக்கு இருந்த கவனத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ராகுல் திராவிட் மட்டை பிடித்து ஆடும்போது கொண்டிருந்த கவனக் குவிப்பு பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
வேலை, ரசனை, உணவு, பேச்சு, உறவு, வேடிக்கை பார்த்தல், பிரார்த்தனை செய்தல், ஓய்வெடுத்தல் என எதை எடுத்துக்கொண்டாலும் இத்தகைய கவனம் இருந்தால் அந்தச் செயல் வெறும் செயலாக இருக்காது. அந்தச் செயலே ஒர் தவம்போல ஆகிவிடும்.
இதுபோன்ற கவனம்தான் நமக்கும் அந்த இடம், பொருள், அனுபவம் ஆகியவற்றுக்குமான உறவை ஆழமாக்கும். அவற்றைப் பற்றிய ஆழமான புரிதல் ஏற்படும்.
அப்படிப்பட்ட கவனம் என்பது தியானம் போன்றது.
**- அமுதன்**�,