அன்பின் பரிமாற்றம்!
கிராமப்புறத்திலிருந்து வந்த பெண் சென்னை நகரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்தார். கல்லூரி அந்த அளவுக்குப் பிரபலம் அடையவில்லை என்றாலும், அங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் கேரளம், அந்தமான், ஹைதராபாத் போன்ற நகரங்களைச் சேர்ந்தவர்கள். கிராமப் பின்னணியில் இருந்துவந்த பெண்ணுக்கு இவர்களோடு பழகுவதில் பல சிரமங்கள் இருந்தன. இவளுக்கு அந்தமானைச் சேர்ந்த பெண்ணுடன் ஓரளவு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண் பார்ப்பவர்களைக் கட்டிபிடிக்கும் பழக்கம் கொண்டவர். கல்லூரிக்கு வந்தவுடனே தனது நண்பர்களைக் கட்டிபிடித்து ஹாய் சொல்வார்.
தன்னை அந்தப் பெண் கட்டிபிடித்தபோது பெண்ணாகவே இருந்தாலும், கிராமத்துப் பெண்ணுக்கு ஒருவித கூச்சம் ஏற்பட்டது. இருந்தாலும், மறுப்பு சொல்லாமல் மரியாதைக்காகக் கட்டிபிடித்து ஹாய் சொல்ல ஆரம்பித்தாள். சில நாட்களிலேயே கிராமத்துப் பெண்ணுக்கு அந்த பழக்கம் பிடித்துபோய்விட்டது. கட்டிபிடிக்கும்போது ஏதோ ஒரு பாச உணர்வு தோன்றியது. அன்றைய தினம் முதல் தனது தோழிகளைப் பார்க்கும்போது கட்டிபிடித்தே வரவேற்பாள் கிராமத்துப் பெண்.
மேலை நாடுகளில் நண்பரை – அது ஆணோ, பெண்ணோ – பார்க்கும்போது கட்டிபிடிப்பது பொதுவான வழக்கம். இந்தப் பழக்கம் தற்போது தமிழகத்திலும் பரவலாகி வருகிறது. பிரபலங்கள் மட்டுமல்ல, சாதாரண மக்களும் இதைப் பழகிவருகிறார்கள். ஆனால், இப்படிக் கட்டிபிடிப்பது கிராமப்புறங்களில் வேறு விதமாகப் பார்க்கப்படுகிறது.
கட்டிபிடித்தல் என்பதைப் பாலுறவுடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ளும் பழக்கம் நம்மூரில் சிலருக்கு இருக்கிறது. எதிர்ப்பாலினத்தவரின் உடல் என்பது எப்போதும் காமத்தோடு சேர்த்தே இங்கே பலராலும் பார்க்கப்படுகிறது. இதுதான் கட்டிபிடித்தலைத் தவறாக நினைக்கச் செய்கிறது. சில குடும்பங்களில் வளர்ந்த பெண்கள் தந்தையைக்கூடக் கட்டித் தழுவ முடியாது. சகோதர – சகோதரிகள்கூடக் கட்டிபிடித்துக்கொள்ள முடியாது. அந்த அளவுக்கு இங்கே ஆண் – பெண் பிரிவுக் கோடுகள் வலுவாக இருக்கின்றன.
உடல் என்பதற்கு நாம் தரும் அதீத முக்கியத்துவமே இதற்கெல்லாம் காரணம். நாய், பூனை, ஆட்டுக்குட்டி ஆகிய பிராணிகளைக் கட்டித் தழுவும் மனிதர்கள் சக மனிதரின் உடலை எண்ணி இந்த அளவு பதற்றம் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.
உண்மையான நண்பர்களுக்குத் தெரியும், கட்டிபிடித்தல் என்பது காமத்தில் சேர்ந்தது அல்ல என்பது!
கட்டிபிடித்தல் என்பது அன்பைப் பகிர்ந்துகொள்ளுதல். பரஸ்பரம் ஆறுதல் கூறுவதுபோன்ற செயல் அது, உனக்கு நான் இருக்கிறேன் என்ற உணர்வை அது கடத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒருவரைக் கட்டிபிடிக்கும்போது நட்பின் செய்தியை, இணக்கம் என்னும் உணர்வைப் பகிர்கிறோம்.
ஒரு காலத்தில் ஆணும் பெண்ணும் கைகுலுக்குவதேகூடத் தவறு என்ற எண்ணம் இங்கே இருந்தது. அந்த எண்ணம் மாறிக் கைகுலுக்குவது சகஜமாகியிருப்பதுபோலக் கட்டிபிடிப்பதும் ஒருநாள் இங்கு சகஜமாகும்.
**- சா.வினிதா**�,