கலங்கித் தெளியும் மனம்!
விழுந்தால் எழும் இயல்பைப் போலவே, கலங்கினால் தெளியும் பழக்கமும் மனித மனத்துக்கு வாய்த்துள்ளது. எத்தனை பெரிய துன்பம் வந்தாலும், அக்கணத்தில் அதைக் கடந்துவந்தால் போதும். அதன் பின்னர், கடந்த காலத் துன்பம் என்பது நம் பேசுபொருளின் ஒரு பகுதியாக மட்டுமே மீதி இருக்கும். அதுவே நகைச்சுவையாக வெளிப்பட்டால், அத்துன்பம் தந்த வேதனையிலிருந்து மனம் நீங்கிப் பக்குவப்பட்டுவிட்டது என்றே கொள்ள வேண்டும்.
ஆனால், துன்பங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் கணங்கள் மிகக் கொடூரமானவை. சில நேரங்களில் உலகில் கொடுமையாகச் சபிக்கப்பட்டவர் நாம்தான் என்ற எண்ணம்கூடத் தோன்றும். அத்தகைய கடினமான நேரங்களில் நமக்குத் துணை நிற்பவை நம் நம்பிக்கைகளும் நட்பும் உறவும் மட்டுமே. இம்மூன்றும் நல்லனவாக அமைந்தால், எத்தகைய துன்பத்தையும் கடந்துவிடலாம். அவ்வாறு வாய்க்கப் பெறாதவர்கள், வெள்ளத்தில் அடிபட்ட உயிரொன்று கொழுகொம்பைத் தேடிப் பரபரப்பது போலத் திரிவார்கள்.
ஒரு நல்ல குருவின் கடமை அத்தகையவர்களைக் கண்டுணர்ந்து ஆற்றுப்படுத்துவதுதான்.
பவுத்தத் துறவி ஒருவரிடம் இத்தகைய அம்சங்கள் நிறைந்திருப்பது கண்டு அவரிடம் சீடராகச் சேர்ந்தார் ஒருவர். சில ஆண்டுகளில் அவரது பிரதான சீடர்களில் ஒருவரானார். ஒருமுறை தீராத துன்பங்களால் வாடித் துன்புறுவதாகக் கூறி ஒருவர் அந்தத் துறவியை நாடி வந்தார். தான் மனம் கலங்கியிருப்பதாகக் கதறினார்.
இது பற்றித் துறவியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரோ, அந்த நபரை அப்படியே விட்டுவிடுமாறும், தன்னை வந்து சந்திக்க வேண்டாமென்றும் கூறிவிட்டார்.
சீடருக்குத் தாங்க முடியாத அதிர்ச்சி. அது அவரது முகத்திலும் வெளிப்பட்டது. துறவிக்கு அது நன்றாகப் புரிந்தும், அவர் எந்தப் பதிலும் கூறவில்லை.
சில நாட்கள் கழிந்தது. ஒருநாள் வனப் பகுதியின் வழியே துறவியும் அந்தச் சீடரும் சென்றனர். அங்கிருந்த ஒரு குட்டையைப் பார்த்த அந்தத் துறவி, அந்த நீரில் கல்லை எறிந்தார். தனது சீடரைப் பார்த்து, அக்குட்டையிலிருந்து தெளிந்த நீரை எடுத்து வருமாறு கூறினார். எவ்வளவு முயற்சிகள் செய்தும், அந்தச் சீடரினால் கலங்கிய நீரையே எடுத்துவர முடிந்தது. ஒரு பாறையின் மீதமர்ந்த புத்தத் துறவி, அவர் கொண்டுவரும் நீர் கலங்கியிருப்பதைக் கண்டார். மீண்டும் தெளிந்த நீரை எடுத்துவரச் சொன்னார். இரண்டு, மூன்று முறைக்குப் பிறகு அந்தச் சீடர் நீர் கலங்கியிருப்பதாக வாய் திறந்து தெரிவித்தார்.
அவரைத் தன் அருகில் அமரச் சொன்னார் அந்தத் துறவி. வேறு சில விஷயங்கள் பேசியவர், சில நிமிடங்கள் கழித்து மீண்டும் குட்டையில் இருந்து நீர் எடுத்துவரச் சொன்னார். இப்போது, எந்தச் சலனமும் இல்லாமல் இருந்த நீரைக் கைகளில் ஏந்திவந்தார் சீடர். புத்தர் அவரைப் பார்த்துச் சிரித்தார்.
மனதில் இயல்பு காலத்தின் அடிப்படையில் மாறக்கூடியது. சில நேரங்களில் வெளியிலிருந்து கிடைக்கும் ஆறுதலைவிட, அகத்திலிருந்து முகிழ்க்கும் பக்குவத்தால் துன்பத்திலிருந்து தெளிவது மிகப் பெரிய வழிகாட்டுதலை அளிக்கும்.
**- உதய்**�,