ஒரு கப் காபி

Published On:

| By Balaji

கிசுகிசுப்பில் சிதறும் உண்மை!

எந்தவொரு விஷயத்தையும் நேரடியாக எதிர்கொள்வதும், அதற்கான நமது பதிலை அளிப்பதும் சிறந்த வழியாகும். நேரடியாகக் கண்டு, கேட்டு, உணர்ந்த விஷயங்களுக்கு மட்டும் எதிர்வினையாற்றுவது சரியான அணுகுமுறையாக இருக்கும். ஆனால், நம்மில் பலர் இதைப் பின்பற்றுவதே இல்லை. ‘அந்த ஆள் சரியில்லன்னு நம்ம வசந்த் சொல்றாண்டா’, ‘யார் நல்லாயிருந்தாலும் நம்ம மோகினிக்குப் பிடிக்காது’, ‘என் ஃப்ரெண்டுக்கு தெரிஞ்சவர் ஆபீஸ்ல இவர் வேலை பார்த்திருக்கிறாராம், ஆள் ரொம்பவே முசுடாம்’ என்று யாரோ ஒருவரைப் பற்றிய தகவல்கள் பேச்சில் வலம் வரும். சில நேரங்களில் சம்பந்தப்பட்டவர் குணம், பின்னணி எதுவும் நேரடியாகத் தெரியாவிட்டாலும்கூட, நாமும் அந்த விவாதத்தில் பங்குபெறுவோம். கருத்துகளை அள்ளித் தெளித்துவிட்டுச் சென்றுவிடுவோம்.

ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அதே நபரை நேரில் சந்திக்கும்போது, யாரோ பிடித்துவைத்த பிம்பக் கொழுக்கட்டையைத்தான் நம் மனம் அசைபோடும். விளைவு, முதல் சந்திப்பே மோதலுக்குப் பக்கத்தில் வந்து நிற்கும். அந்த நபரைப் பற்றிக் குறிப்பிட்டவர்கூட, தற்போது நமது தொடர்பு எல்லைக்கு அப்பால் போயிருப்பார். ஆனாலும், நிலைமையில் மாற்றம் இருக்காது.

இந்த நேரத்தில்தான், எல்லா முன்யோசனைகளையும் அனுமானங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு, குறிப்பிட்ட நபரை எதிர்கொள்ளும்போது நமக்கு என்ன அனுபவம் கிடைக்கப் போகிறது என்ற கேள்விக்குப் பதில் தேடத் தொடங்க வேண்டும். ஆங்கிலத்தில் ‘சைனிஷ் விஸ்பர்ஸ்’ (Chinese Whispers) என்றொரு குழந்தைகள் விளையாட்டுக்கான பதம் உண்டு. இதில், முதலாவது குழந்தை இரண்டாவது குழந்தையின் காதில் ஒரு வாக்கியத்தை ரகசியமாகச் சொல்லும். அந்த தகவல் இரண்டாவது, மூன்றாவது என்று தொடர்ந்து கடைசி குழந்தையின் காதுக்கு ஒரு தகவல் வந்து சேரும். அந்த குழந்தைக்கு என்ன தகவல் கிடைத்தது என்பது இறுதியாக வெளிப்படுத்தப்படும். பெரும்பாலும் முதலாவதாக உள்ள குழந்தை சொன்ன தகவலுக்கும், கடைசியாக இருக்கும் குழந்தை வெளிப்படுத்தும் தகவலுக்கும் வித்தியாசம் இருந்தே தீரும். ஓர் உண்மை முற்றிலுமாகச் சிதறடிக்கப்படுவதும் நிகழும். இதனைக் குழந்தைகளுக்கு உணர்த்துவதற்காகத் தான் இந்த விளையாட்டு.

இந்த விளையாட்டின் பெயரில் சைனிஷ் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டதற்கும் காரணம் உண்டு. சீன நாடு, மக்கள், கலாச்சாரம் பற்றி அறிவதில் ஐரோப்பியர்களுக்குப் பல நூற்றாண்டுகளாகக் குழப்பம் இருந்து வந்தது. சீனர்கள் ரகசியமானவர்கள் என்ற எண்ணமும் இதன் பின்னிருந்தது. செவி வழிச் செய்தியாகப் பரவிய அந்த தகவலே, ஒரு விளையாட்டுக்குப் பெயர் வைக்கவும் காரணமாகிவிட்டது.

வாட்ஸ் அப் யுகத்திலும்கூட, நாம் பல்வேறு தகவல்களைக் கதைகளாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். படித்தும், பார்த்தும், பரப்பியும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவற்றில் எது உண்மை, எது பொய் என்று தெரியாமல் உடனடியாக நமது கருத்தைத் தெரிவிக்கிறோம். செவி வழிச் செய்தியின் பலமும் பலவீனமும் அதுதான். உள்ளங்கையில் நிரம்பியிருக்கும் நீர் ஒவ்வொருவர் கைக்கும் மாற்றப்படும்போது, இறுதியாக ஒரு சொட்டு கூட மிஞ்சாது. நீரைப் போலல்லாமல், பரப்பப்படும் தகவல்களில் சேதாரத்துடன் கொஞ்சம் சேர்க்கையும் உண்டு.

சொல்லப்படும் வார்த்தைகள் மட்டுமல்ல, எழுதப்படும் வார்த்தைகளும் கூட இப்போது வேகமாக உருமாறுகின்றன. நீரைத் தவிர்த்துப் பாலை உண்ணும் அன்னப் பறவையாக, அதில் உண்மையைத் தேடும் திறன் இருத்தல் ஒவ்வொரு மனிதருக்கும் அவசியம். நாளும் பெருகும் அறிவும் அனுபவங்களும் அந்தப் பயிற்சியைக் கட்டாயம் தரும்!

**- பா.உதய்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share