இன்றைய தலைமுறையின் ‘தலை’யாய பிரச்சினை!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. அதற்காக, தான் அழகாக இருப்பதாக மற்றவர்கள் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்ப்பதும், தேவையில்லாத மெனக்கெடல்களில் ஈடுபடுவதும் சரியானதாகாது. நுகர்வுக் கலாச்சாரம் பெருகியிருக்கும் இவ்வேளையில், இயல்பைத் தொலைத்துவிட்டு செயற்கையான அம்சங்களைத் தேடி ஓடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. குறிப்பாக, ஆண்களைவிடப் பெண்களைக் குறிவைத்தே அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நகரங்கள் மட்டுமல்ல; கிராமங்களும் இந்த அழகியல் அட்ராசிட்டிகளில் மாட்டிக்கொள்கின்றன.
மணப்பெண்ணுக்கு நீளமான தலைமுடி இருக்க வேண்டும் என்பது, காலம்காலமாக மாப்பிள்ளை வீட்டார் சொல்லும் நிபந்தனைகளில் முதலாவதாக இடம்பெறுகிறது. கிராமப்புறங்களில் அழகுப் பெண்களுக்கான முதல் இலக்கணமே, நீளமான தலைமுடி வாய்த்திருக்க வேண்டும் என்பதுதான்.
நகரத்தில் உள்ள சில குடும்பங்களில், குழந்தைகளாக இருக்கும்போதே பெண் குழந்தைகளின் தலைமுடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைப்பது, முட்டையை உடைத்துத் தேய்ப்பது, சோற்றுக் கற்றாழைச் சாற்றைப் பூசுவது உள்ளிட்ட பல உத்திகள் இதற்காகக் கடைப்பிடிக்கப்படும். கிராமங்களில் இந்த அளவுக்கு மெனக்கெடல் இருக்காது என்றாலும், தலைமுடி பராமரிப்பு என்ற விஷயத்தில் கவனம் செலுத்தாமல் இருக்க மாட்டார்கள்.
இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப, பெரும்பாலான பெண்கள் தலைமுடியைச் சிறியதாக வைத்துக்கொள்கின்றனர். விமானம் ஓட்டுவது, விண்வெளிக்குச் செல்வது போன்ற சாதனைகளைச் செய்யத் தொடங்கிய பின்னரும், பெண்ணுக்கு நீளமான தலைமுடிதான் அழகு என்ற சமூகத்தின் பார்வை இன்னமும் மாறவில்லை. அதனால், தலைமுடி குறித்துக் கவலைகொண்ட பெண்கள் மருத்துவர்களைத் தேடிச் சென்று சிகிச்சை மேற்கொள்கின்றனர். ஒரு மாதம் முதல் ஓராண்டு வரை சிகிச்சை பெறுகின்றனர். சிகிச்சை பெற்றுக்கொண்டால் மட்டும் போதுமா? அதற்கான வழிமுறைகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டுமே? இந்தக் கவலையே அவர்களது தலையின் பாரத்தை மேலும் குறைக்கிறது. பெண்களுக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினை என்றில்லை. நிறைய இளைஞர்களும்கூட, முடி கொட்டுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இரண்டுக்கும் சேர்த்து சிகிச்சை பெறுகின்றனர்.
நம் முன்னோர்கள் தலைமுடி பராமரிப்பில் அக்கறை காட்டாமல் இருந்ததில்லை. அதே நேரத்தில் பளபள கூந்தல் வேண்டுமென்று விளம்பரங்களைப் பார்த்து ஏங்கியதுமில்லை. இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்வதுதான் இன்றைய தலைமுறையினரிடம் அதிகம் மேலோங்கியிருக்கிறது. நமது உள்ளும் புறமும் இருக்கும் பிரச்சினைகளை யோசித்துப் பார்த்தால், தலைமுடி பற்றிய கவலைகள் நிச்சயம் ஊதித் தள்ளுபவையாகத்தான் இருக்கும். இதற்குப் பிறகும், தலைமுடிதான் உங்களது வாழ்க்கையின் பெரும் பிரச்சினையாக இருப்பதாக உணர்கிறீர்களா? இதைத் தீர்க்க ஒரே ஒரு வழி இருக்கிறது. ‘டேக் இட் பாலிஸி’ என்ற எண்ணத்தைத் தீவிரமாக வளர்த்தெடுங்கள்; அப்போது, இதுபோன்ற அழகியல் அம்சங்கள் குறித்த கவலைகள் மாயமாய் மறைந்து போகும். உங்களது பிரச்சினையும் முடிவுக்கு வந்துவிடும்!
**- சா.வினிதா**�,