!ஒரு கப் காபி!

public

இந்த உறவுக்குப் பொருள் என்ன?

சில மாதங்களுக்கு முன்னர் நட்பான சுமித்ரா அக்கா, இப்போது மதுரையில் இருக்கிறார். கடந்த சில நாட்களாகவே எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருந்தார். என்ன ஆயிற்று என்று தெரிந்துகொள்வதற்காகத் தொலைப்பேசியில் அழைத்துப் பேசினேன். மிகவும் கவலையுடன் பேசிய அவர், அன்பாக வளர்த்த தனது நாய்க்குட்டி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக மனமுடைந்து கூறினார்.

நான் நாய்க்குட்டியை அறிவேன். அவரை நிறைய வீடியோக்களிலும் புகைப்படங்களிலும் அந்த நாய்க்குட்டியுடன் பார்த்துள்ளேன். அது தனக்கு இன்னொரு மகள் என்று என்னிடம் நிறைய முறை அக்கா கூறியிருக்கிறார்.

நாய்க்குட்டியைத் தன் வீட்டின் முற்றத்தில் அடக்கம் செய்துவிட்டு அக்கா நாள் முழுவதும் உண்ணாமல் இருந்திருக்கிறார். அவரிடம் வேறு நாய்க்குட்டி இருக்கிறது. ஆனால், அவரது ‘மகளின்’ இழப்பு மறக்க முடியாதது. அதைத் தினமும் குளிப்பாட்டி, பொட்டுவைத்து அழகுபடுத்தி ரசித்ததை நானும் ரசித்திருக்கிறேன்.

நானும் செல்லப் பிராணி பிரியர்தான். சிவகாசியில் என் வீட்டிலும், நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகள் வளர்கின்றன. அக்காவிடம் பேசிய பிறகு சிறு வயதில் நாங்கள் வளர்த்த மணி என்ற நாய்க்குட்டியின் நினைவு வந்து சென்றது. எனது ஐந்தாம் வயதில் வீடு தேடிவந்த ஆதரவற்ற நாய்க்குட்டி என்னிடம் ஒட்டிக்கொண்டது. நான் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரைக்கும் அது எங்கள் வீட்டில்தான் வளர்ந்தது. அதன் இறப்பை மறக்க எனக்குப் பல நாட்கள் ஆயின.

செல்லப் பிராணிகள் மீது நமக்கு ஏன் இவ்வளவு அன்பு, பாசம் உண்டாகிறது? ஆறறிவு படைத்த மனிதர்களான நமக்கு ஐந்தறிவு படைத்த விலங்குகள் மீது ஏன் இவ்வளவு பிணைப்பு?

**உறவு என்பது என்ன?**

மனிதன் தனித் தீவாக வாழ விரும்பாமையின் அடையாளம்தான் உறவு. சக வாழ்வு, உணர்வுப் பகிர்வு, பாசப் பரிமாற்றம், பிறரிடத்தில் தன் அடையாளத்தைத் தேடுதல், பிறரிடம் ஆறுதல் தேடுதல், பிறருக்கு ஆறுதல் தருதல் ஆகியவை மனிதனுக்குத் தேவைப்படுகின்றன. இவை அனைத்தும் சக மனிதர்களிடம்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சக மனிதர்களிடம் மட்டும்தான் இவை கிடைக்கும் என்பதும் இல்லை. உயிர்களிடத்திலும் இயற்கையின் மீதும் நமக்கு உள்ள தொடர்பின் பிரதிபலிப்புதான் இத்தகைய உறவு.

உறவின் பிணைப்பு என்பதுதான் முக்கியம். அந்தப் பிணைப்பு மனிதரிடத்திலா, பிராணிகளிடத்திலா என்பது முக்கியமல்ல.

உயிரற்ற ஜடப் பொருள்களிடத்திலும் பிணைப்பு இருக்கக்கூடும். சிலர் தங்களது பேனா ராசியானது என்று அதை யாரிடமும் கொடுக்க மாட்டார்கள். சிலருக்குத் தங்களது வீட்டில் கிடக்கும் தாத்தா காலத்துக் கட்டில் மிகவும் சென்டிமென்டாக இருக்கும். சிலர், பேனா மை தெளிக்கப்பட்ட தங்களது பள்ளி சீருடையைப் பொக்கிஷமாக வைத்திருப்பார்கள். சிலர் வீட்டு முற்றத்தில் உள்ள ரோஜாச் செடியுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். சில பெண்கள் குழந்தைப் பருவத்தில் அப்பா வாங்கித் தந்த பொம்மையைக் கட்டிப் பிடித்துத் தூங்குவார்கள். சிலருக்குத் தங்கள் வாகனத்தின் மீது அடங்காத பாசம் இருக்கும்.

மனிதன் தனக்கான எல்லைகளைத் தாண்டி விரிவுகொள்ளும் விழைவின் அடையாளமே இந்த உறவின் நாட்டம். சக மனிதர்களின் இழப்பு மட்டுமல்ல, பிராணிகளின் இழப்பும் பொருள்களின் இழப்பும் நம்மை ஆழமாகப் பாதிப்பது இந்த விழைவின் விளைவுதான்.

**- செந்தில்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0