மனம் உங்கள் வேலைக்காரரா, எஜமானரா?
எந்தக் காரியத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டாள் மாலா. ஏதாவது தவறு நடந்துவிட்டால் ரொம்பவே அப்செட் ஆகிவிடுவாள். நடந்த தவறு மிகவும் சின்ன விஷயமாக இருந்தாலும் கோபப்படுவதும் டென்ஷன் ஆவதும் அவள் வழக்கம்.
ஒரு நாள் தோழிகளுடன் வெளியே செல்வதாக முடிவானது. ஒரு தோழி வருவதற்குத் தாமதமாகிவிட்டதால் எல்லோருக்குமே நேரமாகிவிட்டது. மாலா டென்ஷன் ஆகிவிட்டாள். தாமதமாக வந்த தோழியைப் பார்த்து, “நீ சீக்கிரம் வந்திருந்தால் இந்நேரம் அங்கே போயிருக்கலாம், உன்னாலதான் லேட் ஆகியிருச்சு” என்று கத்த ஆரம்பித்துவிட்டாள்.
தோழிகள், “சரி விடுடி, சில நேரத்துல இப்படி ஆகும். அதுக்கெல்லாம் டென்ஷன் ஆகுறதா, ரிலாக்ஸா இரு” என்று சொன்னார்கள். அதோடு அதை மறந்துவிட்டு மகிழ்ச்சியாகப் பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
மாலாவால் அந்த மனநிலையை விட்டு வர முடியவில்லை. அதையே நினைத்துக் கொண்டிருந்ததில் அவளால் எதையும் ரசிக்க முடியவில்லை. மனம் அமைதியற்று, படபடப்பாக இருந்தது. யாருடனும் பேச முடியவில்லை. எதையும் கவனிக்க முடியவில்லை. ஏன் வெளியே கிளம்பினோம் என்று ஆகிவிட்டது.
இது மாலாவுக்கு வழக்கம்தான். எந்தத் தவறு நடந்துவிட்டாலும் அவளால் தாங்கிக்கொள்ள முடியாது. அந்தத் தவறு ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து எளிதில் வெளியே வர இயலாது. அதையே நினைத்துக்கொண்டு மன அழுத்தத்தை அவளே உருவாக்கிக்கொள்வாள். நடக்காத ஒன்றை நினைத்து இது நடந்தால் எப்படி இருந்திருக்கும், இது நடக்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் சிந்தித்துக்கொண்டிருப்பாள். இருக்கும் இடம், சூழல் எல்லாம் மறந்து அவள் மனம் இந்த அழுத்தத்திலேயே அமிழ்ந்து கிடக்கும்.
“மனம் ஓர் அழகான வேலைக்காரர், அதே வேளையில் மனம் ஓர் ஆபத்தான மாஸ்டர்” என்பார் ஓஷோ.
இந்த மனதை அழகான பணியாளராக ஆக்கிக்கொள்கிறோமா அல்லது ஆபத்தான எஜமானராக ஆக்கிக்கொள்கிறோமா என்பது நம் கையில்தான் உள்ளது.
**- சா.வினிதா**
�,