`ஒத்த செருப்பைக் கொன்றுவிடாதீர்கள்!

Published On:

| By Balaji

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. தனது திரைப்படங்களில் வித்தியாசமான முயற்சிகளைப் புகுத்தும் பார்த்திபன், ஒத்த செருப்பு திரைப்படத்தையும் வித்தியாசமான கோணத்திலேயே அணுகி இயக்கியிருக்கிறார். படம் முழுவதும் ஒரே கதாபாத்திரமாக பார்த்திபன் மட்டுமே காட்சியளிப்பார். திரைப்படத்தைப் பார்த்த ரஜினி, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பல பிரபலங்களும், புதிய முயற்சி என்று பாராட்டுகள் தெரிவித்தனர்.

ஒத்த செருப்பு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ரசிகர்கள் தந்திருக்கும் பாராட்டே தனக்கு ஆஸ்கர் போன்றது என்றும், தியேட்டரில் கிடைக்கும் வரவேற்பு இன்னும் பல செய்ய தூண்டுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார் பார்த்திபன்.

திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், ஒரு பக்கம் பாராட்டுகள் குவிந்தாலும் பல திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்பட்டன. இதுதொடர்பாக சென்னை பிலிம் சேம்பரில் நேற்று (செப்டம்பர் 2) நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பார்த்திபன், அமைச்சர் கடம்பூர் ராஜு, நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது மிகவும் வேதனையோடு பேசிய பார்த்திபன், “செப்டம்பர் 20ஆம் தேதிக்கு முன்பு வெளியிட்டால்தான் ஆஸ்கருக்கு அனுப்ப முடியும் என்ற கட்டாயத்தின் பேரிலேயே, காப்பான் படம் வெளியாகும்போது ஒத்த செருப்பு திரைப்படத்தையும் வெளியிட்டேன். படம் லேசாக பிக்-அப் ஆகும்போது இன்னொரு பெரிய படமான நம்ம வீட்டுப் பிள்ளையும் வெளியானது. இப்போதுதான் ஒத்த செருப்பு திரைப்படத்தைப் பார்க்க மக்கள் அதிகமாக வருகிறார்கள். இதற்கிடையே ஒத்த செருப்பு தமிழ் ராக்கர்ஸிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்று காலை காட்சியில் ஹவுஸ் புல் ஆக ஓடியது. ஆனால், மற்ற திரைப்படங்களின் காட்சியை அதிகரித்துவிட்டு ஒத்த செருப்பு திரைப்படத்தின் காட்சியைக் குறைக்கிறார்கள், சில திரையரங்குகளில் எடுத்தே விட்டார்கள். மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு தியேட்டர்களில் ஹவுஸ் புல் ஆகும் நேரத்தில் படத்தை தியேட்டரில் இருந்து எடுப்பது, ஒரு கலைஞனைச் சாகடித்து அவனுக்குப் போடப்பட்ட மாலையை எடுத்து மணமகனுக்கு மணமாலையாகப் போடுவதற்கு சமமானது. ஒத்த செருப்பு திரைப்படத்தைக் கொன்றுவிடாதீர்கள் என்று திரையரங்க உரிமையாளர்களிடம் அன்பாக வேண்டுகோள் வைக்கிறோம்” என்று வேதனையாகக் குறிப்பிட்டுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share