டிடிவி தினகரன் சிறையில் இருந்து விடுதலை ஆனதும் அதிமுக பழையபடி மீண்டும் பரபரப்பு வளையத்துக்குள் வந்திருக்கிறது. இன்று மின்னம்பலம் காலை பதிப்பில் நாம் குறிப்பிட்டது போல… தினகரன் இன்று காலை சசிகலாவை சந்திக்க பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்குப் புறப்பட்டார்.
அவர் சசிகலாவை சந்திக்கிறாரா இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்காக ஆவலோடு சென்னையிலேயே காத்திருந்தனர் தமிழக அமைச்சர்கள். தினகரன் சசிகலாவை சந்திக்கப் போவதை உறுதிப்படுத்திக் கொண்டவுடன்… தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
முன்னர் அ.தி.மு.க மீண்டும் இணைய வேண்டுமென்றால், டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஓ.பி.எஸ் அணி முன்வைத்தது. அதற்கு, எடப்பாடி அணியும் ஒப்புக்கொண்டது. ஆனால், தன்னை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது என்று ஜாமீனில் வெளிவந்த டி.டி.வி.தினகரன் அதிரடியாகத் தெரிவித்தார். இதையடுத்து பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்தித்துள்ளார்.
இந்தக் குழப்பமான சூழலில்தான்… எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார், செங்கோட்டையன், சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், தங்கமணி, வளர்மதி, விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 19 அமைச்சர்கள் அவசரமாகக் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகத்திலுள்ள அமைச்சர் ஜெயக்குமாரின் அறையில் ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதல்வர் பங்குபெறவில்லை. கூட்டத்தைத் தொடர்ந்து முதல்வரை அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் ‘முன்னர் அறிவித்தபடி டி.டி.வி.தினகரனுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலா, தினகரன் குடும்பத்துக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களை சார்ந்து நாங்கள் இல்லை. அவர்கள் இல்லாத நல்லாட்சி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. தினகரனை நாங்கள் ஒதுக்கியது ஒதுக்கியதுதான். இதை உணர்ந்து அவர் ஒதுங்க வேண்டும். இல்லையென்றால் விளைவு விபரீதமாகும்’’ என்றார்.
இந்த ஆட்டம் இப்போதைக்கு ஓயாது!�,