2017 ஐ.பி.எல் தொடரின் இறுதி போட்டி நேற்றிரவு ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 9 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி 6 முறையும், இரண்டாவது பேட் செய்த அணி 3 முறையும் வெற்றிகண்டுள்ளதால், டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இருப்பினும் இந்த ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியுடன் 3 முறை மோதி, அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த புனே அணி இந்தப் போட்டியிலும் வெற்றிபெற்றுக் கோப்பையைக் கைப்பற்றும் என்றே புனே அணியின் ரசிகர்களும், தோனியின் ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
இறுதிப் போட்டிக்கு முன் மும்பை அணியுடனான போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய, புனே அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் நேற்றைய போட்டியில் இடம்பெற்றிருந்தார் என்பதால் மும்பை அணிக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்ய, தொடக்க வீரர்களாகப் பார்த்திவ் படேல், மற்றும் சிம்மன்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே புனே அணியின் பந்துவீச்சைத் தாக்குபிடிக்க முடியாமல் மும்பை அணி விக்கெட்டுகளைப் பறிகொடுக்கத் தொடக்கியது. இந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பாகப் பந்து வீசி வந்த புனே அணியின் வீரர் ஜெய்தேவ் உனட்கட், நேற்றைய போட்டியிலும் சிறப்பாகப் பந்து வீசி மும்பை அணியின் தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். உடன்கட் வீசிய 3 ஆவது ஓவரின் முதல் பந்தில் பார்த்திவ் படேல் தாகூரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த ஓவரின் 4ஆவது பந்திலேயே மற்றொரு தொடக்க வீரர் சிம்மன்ஸ் ஜெய்தேவ் உனட்கட் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் விக்கெட்டுகளைப் பறிகொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ராயுடு ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சி செய்தனர். இருப்பினும் எதிர்பாராத விதமாக 8ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் ராயுடு ரன் ஓட முயற்சி செய்யும் போது, புனே அணியின் கேப்டன் டைரக்ட் ஹிட் மூலம் ரன் அவுட் செய்தார். அதன்பின்னர்க் களமிறங்கிய அதிரடி வீரர் பொல்லார்ட் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அனைத்து ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார். ஆனால் மீண்டும் 3ஆவது பந்தையும் தூக்கி அடிக்க முயற்சி செய்த பொல்லார்ட் கேட்ச் அவுட் ஆகிப் பெவிலியன் திரும்பினார்.
79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து மோசமான நிலையில் மும்பை அணி தவித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்து வர, ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய குர்னல் பாண்டியா 38 பந்துகளில் 47 ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களைச் சேர்த்தது.
இதனைத் தொடர்ந்து 130 ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணியின் தொடக்க வீரர்கள் ரஹானே மற்றும் திரிபதி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் 3ஆவது ஓவரில் திரிபதி எல்.பி.டபள்யூ முறையில், 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர்க் களமிறங்கிய கேப்டன் ஸ்மித் ரஹானே உடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். புனே அணி 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஹானே ஜான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். 12 ஓவர்கள் வரை 71 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த புனே அணி மிக வலுவான நிலையில் இருந்தது. அதன்பின்னர் மைதானத்தின் நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மும்பை அணி பந்து வீச்சாளர்கள், புனே அணியை ரன் எடுக்க விடாமல் திணறடித்தனர். 48 பந்துகளில் 59 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய புனே அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க, கடைசி ஓவர் வரை போட்டி மிகச் சுவாரஸ்யமாகச் சென்றது. தோனி ஸ்மித்துடன் சேர்ந்து அணியை வெற்றிபெறச் செய்வார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, 10 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் அவரும் விக்கெட்டினைப் பறிகொடுத்தார்.
கடைசி ஓவரில் 11 ரன்கள் அடித்தால் வெற்றி என இருந்த நிலையில் புனே அணியின் வீரர் மனோஜ் திவாரி முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். ஆனால் அதன் பின்னர் கேப்டன் ஸ்மித் மற்றும் திவாரி ஆகியோர் தொடர்ச்சியாக இரண்டு பந்துகளில் விக்கெட்டுகளை இழந்ததால் மும்பை அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது.
வாஷிங்டன் சுந்தர் மற்றும் கிறிஸ்டியன் 4 மற்றும் 5ஆவது பந்தில் 3 ரன்களை சேர்த்தனர். ஒரு பந்தில் 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் கிறிஸ்டியன் கடைசி பந்தினை எதிர்கொண்டார். ஆனால் இரண்டு ரன்கள் மட்டுமே கடைசி பந்தில் அவர்களால் எடுக்க முடிந்தது. இறுதியாக ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற மும்பை அணி 3ஆவது முறை ஐ.பி.எல் சாம்பியன் பட்டம் வென்று, சென்னை அணியின் சாதனையை முறியடித்துள்ளது.
�,”