ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உரிய இடமில்லை: டிஜிபி ஜாங்கிட்

Published On:

| By Balaji

தமிழகக் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உரிய இடம் அளிக்காமல் விதி மீறப்படுவதாக டிஜிபி ஜாங்கிட் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழகக் காவல் துறையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்படும் ஐபிஎஸ் அதிகாரிகளும், குரூப் தேர்வுகள் மூலம் தேர்வாகும் டிபிஎஸ் ( பதவி உயர்வு மூலம் ஐபிஎஸ் அந்தஸ்து பெறுபவர்கள்) அதிகாரிகளும் பல்வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். ஆனால் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான இடங்கள், தமிழக டிபிஎஸ் அதிகாரிகளால் நிரப்பப்படுவதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி டிஜிபி ஜாங்கிட் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். இவர் தற்போது மாநகர போக்குவரத்துக் கழக ஊழல் கண்காணிப்பு இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார்.

அந்தக் கடிதத்தில், “ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்பதற்கு நானே ஒரு சான்று. தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரிகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை எனும்போது மட்டுமே டிபிஎஸ் அதிகாரிகளை நியமிக்க விதிகள் உள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலில் இருக்கும்போது சட்டம் ஒழுங்கு போன்ற முக்கிய பொறுப்புகளுக்கு டிபிஎஸ் அதிகாரிகளை நியமிப்பது சட்டவிதிகளை மீறுவதாகும்” என்று கூறியுள்ளார்.

இதற்கான உச்ச நீதிமன்ற உத்தரவைக் குறிப்பிட்டுள்ள அவர், “இதுபோல விதிகளை மீறி தமிழகக் காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர்கள், துணை ஆணையர்கள் போன்ற முக்கியப் பொறுப்புகளில் 76 பேரில் 36 பேர் டிபிஎஸ் அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகக் காவல் துறையில் சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்” என்று அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share