`ஐபிஎல்: வெற்றியை ருசிக்காத கோலி அணி!

Published On:

| By Balaji

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும்போதே கௌதம் கம்பீர் பெங்களூர் அணி ஒருமுறைகூட கோப்பையை வெல்லவில்லை என்று விராட் கோலியை சாடியிருந்தார். அந்த விமர்சனத்தை நேர்மறையாக எதிர்கொண்ட கோலி முதிர்ச்சிமிக்க பதிலை வழங்கியிருந்தார்.

இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில் குறையில்லாமல் பயணிக்கும் கோலிக்கு பெங்களூர் அணியை அவ்வாறு அழைத்துச் செல்ல முடியவில்லை என்ற விமர்சனத்துக்கு வலு சேர்க்கும் விதமாகவே இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகள் அமைந்துள்ளன. நேற்றைய போட்டியும் அதற்கு விதிவிலக்கல்ல.

நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர் அணி வீரர்கள் ரன் கணக்கைத் தொடங்க ஆயத்தமாகினர். நேற்றைய போட்டியைச் சேர்த்து நான்கு போட்டிகளிலும் பெங்களூர் அணி தொடக்க வீரர்களை மாற்றியே களமிறங்கி வருகிறது. அந்தவகையில் விராட் கோலியும், பார்திவ் படேலும் களமிறங்கினர். கேப்டல் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த படேல் சரியான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.

25 பந்துகளை எதிர்கொண்டிருந்த விராட் கோலி 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தும் பேட்ஸ்மேனான டி வில்லியர்ஸ் இந்த ஆட்டத்தில் 13 ரன்களில் வெளியேறினார். ஹெட்மயர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். பார்திவ் படேலும் 67 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுக்க அந்த அணி இருபது ஓவர் முடிவில் 158 ரன்களைப் பெற்றிருந்தது. ராஜஸ்தான் அணி சார்பில் ஸ்ரேயாஸ் கோபால் மூன்று முக்கிய வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார்.

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் ரஹானே 22 ரன்கள் எடுத்தார். ஜோஸ் பட்லர் 59 ரன்கள் குவித்தார். ஸ்டீபன் ஸ்மித் 38 ரன்களையும் ராகுல் திரிபாதி 34 ரன்களையும் அடித்தனர். இதனால் 19.5 ஓவரில் ராஜஸ்தான் அணி வென்றது.

மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய ஸ்ரேயாஸ் கோபால் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து நான்கு போட்டிகளில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share