‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஐபிஎல் போட்டிகளை ரசிகர்கள் பார்க்க வேண்டாம்’ என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத நிலையில், மத்திய அரசைக் கண்டித்தும் மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7) மும்பையில் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்தன. ஆனால், தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அப்படி நடத்தப்பட்டால் மைதானத்துக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் கிரிக்கெட் வீரர்களைச் சிறைபிடிப்போம் என்று மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளை வேறு இடங்களில் நடத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன், ஐபிஎல் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என்ற கோரிக்கை தீவிரமாக எழுந்துள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளை பார்க்காதீர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று (ஏப்ரல் 7) செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது ஐபிஎல் நிர்வாகம். இதில் தமிழக அரசின் பங்கு எதுவும் இல்லை. நாங்கள் பாதுகாப்பு மட்டுமே கொடுக்கிறோம்” என்று தெரிவித்த அவர், “தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து ஐபிஎல் நிர்வாகத்துக்குக் கண்டிப்பாகத் தெரியும். இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெறுவது என்பது நன்றாக இருக்காது என்பதை மனதில்கொண்டு சென்னையில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும். ஆனால், நாங்கள் நடத்திய தீருவோம் என்று அவர்கள் கூறினால், தமிழகத்தின் நலன் கருதி ரசிகர்கள் அந்தப் போட்டிக்கு போகாமல் இருந்தால் அதுதான் நல்லது” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தேர்வு செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. தமிழக அரசு மூன்று பேரை பரிந்துரை செய்திருந்தது. துணைவேந்தர் நியமன விவகாரத்தில் ஆளுநரின் முடிவில் மாநில அரசு தலையிட முடியாது” என்ற அமைச்சர், “நடை பயணம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு யாரும் இடையூறு செய்ய வேண்டாம்” என்றும் தெரிவித்தார்.�,