கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய (மார்ச் 30) ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் விளையாடிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான நிகில் நாயக் 7 ரன்களிலும் கிறிஸ் லின் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக வந்த உத்தப்பா, நிதிஷ் ரானா, சுப்மன் கில் ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேற, கொல்கத்தா அணி 9.1 ஓவர்களில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் இணைந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆந்திரே ரஸல் ஜோடி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. ஆந்திரே ரஸல் 28 பந்துகளில் 62 ரன்கள் எடுக்க, தினேஷ் கார்த்திக் 36 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 2 விக்கெட் எடுத்தார்.
186 ரன்களை இலக்காகக்கொண்டு களமிறங்கிய டெல்லி அணியின் இளம் துவக்க வீரரான பிரித்வி ஷா தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவன் 16 ரன்களில் வெளியேறினாலும் பிரித்வி ஷாவுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். 43 ரன் எடுத்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தவுடன் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் முழுப் பொறுப்பும் பிரித்விக்கு இருந்தது. அதை உணர்ந்து பொறுப்புடனும் அதேநேரம் அதிரடியாகவும் விளையாடி ரன்கள் சேர்த்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் 99 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். அவரது விக்கெட் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. கடைசி ஓவர்களில் குல்தீப் யாதவின் சிக்கனமான பந்துவீச்சால் டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பு சுக்குநூறானது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிறப்பாகப் பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் போட்டி டையில் முடிந்தது. ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் சூப்பர் ஓவர் பின்னர் தொடங்கியது. முதலில் விளையாடிய டெல்லி அணி பிரசித் கிருஷ்ணா வீசிய ஓவரில் 10 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி, ரபாடாவின் பந்துவீச்சில் ரன் எடுக்க முடியாமல் திணறியது. ஆறு பந்துகளையும் யார்க்கராக வீசிய ரபாடா 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதன் மூலம் டெல்லி அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. 99 ரன்கள் குவித்த பிரித்வி ஷா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.�,”