மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படத்தின் இசை வெளியீடு குறித்த சர்ப்ரைஸ் தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள படம் ‘செக்கச்சிவந்த வானம்’. இந்தப் படத்தில் நடிகர்கள் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டன. இதன் பின்னர் படத்தின் டிரெய்லரைக் கடந்த 25ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். அனல் பறக்கும் காட்சிகளுடன் படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விஜய் சேதுபதி போலீஸாகவும், அரவிந்சாமி, அருண் விஜய், சிம்பு சகோதரர்களாகவும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தின் பாடல்கள் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக ரஹ்மானின் நேரடி இசைச் கச்சேரி நடக்கவிருக்கிறது என்றும் ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்படவுள்ளது என்றும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
“நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த செய்தி இதோ! வரும் செப்டம்பர் 5 அன்று நடைபெறும் செக்கச்சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடி இசைச் கச்சேரியை நடத்துவார். இதை ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்போகிறோம்” என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது
மணிரத்னம் – ரஹ்மான் – வைரமுத்து கூட்டணியில் வெளியான அனைத்தும் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. எனவே ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் பாடல்களுக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
மேலும் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிக்காகச் சுற்றுப்பயணம் செய்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று வாஷிங்டன் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ. 1 கோடி அளிப்பதாக அறிவித்து அதற்கான காசோலையை வழங்கினார். இந்தத் தொகையை அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவரின் சார்பில் வழங்குவதாக ரஹ்மான் தெரிவித்தார்.
ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரளாவில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய சிறிய உதவி. அமெரிக்கச் சுற்றுப் பயணத்தில் இருக்கும் எங்கள் குழுவின் இந்தச் சிறிய உதவி உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.�,”