ஏர்செல் மேக்சிஸ்: கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய தடை நீட்டிப்பு!

public

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தையும் கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி சமீபத்தில் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இழுபறி நீடித்து வந்தது. இழுபறிக்குப் பின்னர் சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக நிறுத்தினால் அவர் மீது ஆளும்கட்சி கைது நடவடிக்கையை எடுக்கலாம் என்று கருதிய நிலையில் நீண்ட ஆலோசனைக்குப் பிறகும், ப.சிதம்பரத்தின் அழுத்தத்தின் காரணத்தினாலும் அவரை வேட்பாளராக அறிவித்திருக்கிறது காங்கிரஸ்.

இந்த நிலையில் நேற்று (மார்ச் 25) ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்வதற்கான தடையை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஏப்ரல் 26ஆம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

2006ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதில், கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

கார்த்தி சிதம்பரம் மீது கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதியும் ப.சிதம்பரம் மீது ஜூலை 19ஆம் தேதியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி இருவர் சார்பிலும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி இருவரையும் கைது செய்ய தடை விதித்துத் தொடர்ந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

பிப்ரவரி 18, மார்ச் 8,மார்ச் 25 எனப் பல முறை இருவரையும் கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று (மார்ச் 25) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்வதற்கான தடையை ஏப்ரல் 26ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *