தமிழகம் முழுவதும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அளவீடு செய்து எல்லைகளை வரையறை செய்யக் கோரிய மனுவுக்கு, ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க, தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டம் கடந்த 2007ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளை அளவீடு செய்து அது சம்பந்தமான பதிவேடுகளைத் தயாரிக்க இந்தச் சட்டத்தில் வழிவகை செய்துள்ளது.
ஆனால் 10 ஆண்டுகளாகியும் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை எனவும், ஏரிகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி, மாற்றம் இந்தியா இயக்குனர் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 2017- 2018ஆம் ஆண்டு அரசு கொள்கை குறிப்பின் படி தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் 39,202 ஏரிகள் இருப்பதாகவும், இதில் பெரும்பாலான ஏரிகள் அளவீடு செய்யப்படாமலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் இளந்திரையன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூலை 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் இந்த மனுவுக்குப் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.�,