நமக்குள் தேடுவோம் 15 – ஆசிஃபா
என் அம்மாவிற்கு இருக்கும் நல்ல பழக்கங்களில் ஒன்று, காலந்தவறாமை. நேரத்திற்கு ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும், குறித்த நேரத்தில் வேலையை முடிக்க வேண்டும், ஒரு வேலையை ஒப்புக்கொண்டால், அதைச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்று சொல்வார். அவரிடம் இருந்து அந்தப் பழக்கம் எனக்கும் சிறிது ஏற்பட்டிருக்கிறது.
காலந்தவறாமை என்பது மிகவும் நுணுக்கமான விஷயம். பல விஷயங்களுடன் தொடர்புள்ள விஷயம். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், நம் வேலைகளில் சரியாக இருப்பது காலந்தவறாமைக்கு மிகவும் முக்கியம். காலையில் வீட்டு வேலை முடித்து வெளியில் செல்ல வேண்டும் என்றால், வீட்டு வேலையைச் செய்வதற்குத் தேவையான நேரம் வேண்டும். அதற்குக் காலையில் சீக்கிரமாக எழ வேண்டும்; அப்படியென்றால் இரவில் சரியாக உறங்க வேண்டும். முந்தைய தின வேலைகளை முடித்திருக்க வேண்டும். இது இடையறாத சங்கிலி. ஒன்று தவறினாலும், இன்னொன்று பாதிப்படையும்.
போன கட்டுரையில் ஷெட்யூல் பற்றிப் பேசினோம் இல்லையா? காலம் தவறாமல் நம் வேலைகளைச் செய்ய ஷெட்யூல் உதவுகிறது. இப்போது இன்று ஏதோ ஒரு வேலை தவறிவிட்டது என்றால், அதை இன்னொரு நாள் செய்ய வேண்டும். அந்த நாளின் வேலைகளை இது பாதிக்க விடக் கூடாது. ஷெட்யூல் செய்வது என்பது இப்படியான சூழலில் மிகவும் உதவுகிறது.
காலந்தவறாமை பல நேரங்களில் தேவையற்ற பதற்றத்தைக் குறைக்கிறது. அதுவும், மனப் பிரச்சனைகளில் இருக்கும் நபர்களுக்கு இது மிகவும் உதவும். இதை ஏன் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், நான் அனுபவித்திருக்கிறேன்! ஒரு இடத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் போனால், இதயம் வெளியில் வந்துவிடுவதுபோலத் துடிக்கும். அது அடுத்த வேலையிலும் பிரதிபலிக்கும்.
இதையெல்லாம் தவிர்க்க, முடிந்தவரையில் சரியான நேரத்தில் அந்தந்த வேலைகளைச் செய்வது நல்லது. இந்தப் பழக்கம் ஒரே நாளில் வந்துவிடாது. பொறுமையும், பழக்கமும் அவசியம். சிறு வயதிலேயே வர வேண்டும் என்று சொல்வார்கள். சிறு வயதிலேயே பழக்கிக்கொள்வது எளிது; இயல்பானது. எனவே, நல்லது. ஆனால், சிறு வயதிலேயே பழகாவிட்டால் அது வராது என்று சொல்லப்படுவதை நான் நம்பவில்லை. எந்த ஒரு பழக்கமும், நமக்கு வேண்டுமென்றால் எப்போது வேண்டுமானாலும் பழகிக்கொள்ள வேண்டியதுதான். நாம் செய்யும் அனைத்துமே சின்ன வயதில் பழகியதா என்ன?
காலந்தவறாமையைக் கடைப்பிடிக்க என்ன செய்யலாம்? என் நண்பர்களில் சிலர் காலந்தவறாமையில் கெட்டிக்காரர்கள். அவர்களிடம் கேட்டதிலிருந்து, இதைத் தொகுத்துச் சொல்கிறேன்.
· அடுத்த நாளைக்குத் தேவையான உடை, புக்ஸ், பேப்பர்ஸ் போன்றவற்றைச் சோர்வாக இருந்தாலும், இரவே எடுத்து வைப்பது காலையில் உதவும்.
· ஒருவேளை தாமதமாகிவிட்டால், பதறாமல் முக்கியமான வேலைக்கு அதிகமான நேரத்தை ஒதுக்கலாம். மற்றவற்றைப் பிறகு முடிவு செய்யலாம்.
· கையில் இருக்கும் கடிகாரத்தைப் பார்த்து டென்ஷனாவதிலேயே முக்கால்வாசி நேரம் போய்விடும். அதற்குப் பதிலாக, என்ன செய்தால் டென்ஷன் குறையும் என்று யோசிக்க வேண்டும்.
· அனைத்து வேலையையும் ஒரே நேரத்தில் செய்யாமல், பிரித்துச் செய்வது நல்லது.
இதுபோல, சில பல டிப்ஸ்களைப் பல இடங்களில் நாம் பார்க்கலாம்; கேட்கலாம் இவற்றைப் பின்பற்றுவது நம் விருப்பம். அட்வைஸ் சொல்வது எளிதுதான் இல்லையா?!
காலம் தவறாமல் வேலைகளைச் செய்பவர்களைப் பார்த்தால், சற்று வியப்பாகவும், பொறாமையாகவும் இருக்கும். ஆனால், அவர்களில் பலரில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட பண்பு, அப்போது செய்யும் வேலையில் மட்டுமே அவர்கள் கவனம் இருக்கும். ‘இது தாமதமானால், அது போய்விடுமே!’ என்று யோசிக்காமல், ‘இதை முதலில் வேகமாக முடிப்போம்’ என்று சிந்திக்கிறார்கள். இதை நாம் அனைவருமே எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
[எந்த அளவுக்குத் திட்டமிடுவது?](https://minnambalam.com/k/2019/06/13/8)
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
�,”