�காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் சிலை மோசடி தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் மற்றும் உலோக பரிசோதனை நிபுணர் குழுவினர் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 117 கிலோ எடையுள்ள சோமாஸ்கந்தர் சிலை இருந்தது. இந்தச் சிலை சேதமடைந்ததைத் தொடர்ந்து, புதிதாகச் சிலை செய்யப்பட்டது. அந் சிலையில், தங்கம் சேர்ப்பதில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் மற்றும் உலோக பரிசோதனை நிபுணர் குழுவினர் இணைந்து நேற்றிரவு (ஜூன் 14) திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சிலைகளில் உள்ள பல்வேறு உலோகங்களின் விகிதாசாரத்தைக் கணக்கிடும் அதிநவீன அமெரிக்க கருவியுடன், கோயிலில் உள்ள சிலைகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை, எந்த வகையிலான உலோகத்தால் செய்யப்பட்டவை என்பன பற்றி ஆய்வுகள் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராம், புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருவதாகத் தெரிவித்தார்.�,