பெண் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னடப் பத்திரிகையாளர்கள் நேற்று (ஏப்ரல் 22) போராட்டம் நடத்தினர்.
நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் விதமான கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்குப் பத்திரிகையாளர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்ததோடு அல்லாமல், அவர் மீது பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சென்னை, தி.நகரில் அமைந்துள்ள அக்கட்சியின் அலுவலகமான கமலாலயத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சில பத்திரிகையாளர்கள் எஸ்.வி.சேகர் வீட்டின் மீது தாக்குதலும் நடத்தினர்.
இதற்கிடையே திருமலை என்பவருடைய ஃபேஸ்புக் பதிவைப் படிக்காமல் தான் மீள் பதிவிட்டதாகவும் அதனால் பகிரங்கமான மன்னிப்புக் கோருவதாகவும் கேட்டுக்கொண்ட எஸ்.வி.சேகர், நேற்று முன்தினம் மீண்டும் காணொளி வடிவிலும் தனது மன்னிப்புக் கோரிக்கையை வெளியிட்டார். ஆனால், எஸ்.வி.சேகரை கைது செய்யக் கோரி பல்வேறு மாவட்டங்களில் காவல் நிலையங்களுக்குச் சென்று பத்திரிகையாளர்கள் புகார் அளித்து வருகின்றனர்.
சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடமும் எஸ்.வி.சேகருக்கு எதிராகப் புகார்கள் குவிந்த நிலையில், மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸாருக்கு இந்தப் புகாரை அனுப்பியுள்ளார் ஆணையர்.
அதன் அடிப்படையில் போலீஸார் எஸ்.வி.சேகர் மீது பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல், உள்நோக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை வன்முறைக்குத் தூண்டுவது தனிப்பட்ட நபர்கள் மீது அவதூறு பரப்புதல், பெண்களை இழிவுப்படுத்துதல், பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
எப்போது வேண்டுமானாலும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், தந்தி டிவிக்கு அவர் நேற்று மாலை அளித்த பேட்டியில், தான் தலைமறைவாக இல்லை. சொந்த வேலை காரணமாக பெங்களூரு வந்திருப்பதாகக் கூறினார். மூன்று நாள்களில் சென்னை திரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எஸ்.வி.சேகருக்கு எதிராகத் தமிழகத்தில் போராட்டம் வலுத்துவரும் நிலையில், கர்நாடகாவிலும் போராட்டங்கள் தொடங்கியுள்ளது. எஸ்.வி.சேகருக்கு எதிராக நேற்று (ஏப்ரல் 22) பெங்களூருவில் ஒன்றுகூடிய கன்னடச் செய்தியாளர்கள், அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன் அவரது புகைப்படத்தைச் செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.�,