எஸ்சி.,எஸ்டி.,சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று(21.8.18) வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 20ம்தேதியன்று, உச்ச நீதிமன்றம் எஸ்சி., எஸ்டி சட்டமானது தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று கூறி அரசு ஊழியர்களை கைது செய்யும் முன்னதாக உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முன்னதாக தொடக்க நிலை விசாரணை செய்ய வேண்டும் என்று சில திருத்தங்களை பரிந்துரைத்தது. இந்த திருத்தங்கள் சட்டத்தை நீர்த்து போக வைத்து விடும் என்றும், சட்டத்தை திருத்தக்கூடாது என்றும் கோரி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தின. நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தமும் நடைபெற்றது. இந்த போராட்டங்களுக்கு பணிந்த மத்திய அரசு சட்டத்தை திருத்தப்போவதில்லை என்று அறிவித்தது. பின்னர் பழைய எஸ்சி.,எஸ்டி., சட்டம் 1989 சட்டத்தில் எந்த திருத்தமும் இன்றி அதற்கு வலிமை சேர்க்கும் சில புதிய திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இப்புதிய சட்டத்திருத்தத்தின்படி தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களை கைது செய்யவோ அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவோ யாருடைய முன் அனுமதியும் தேவையில்லை. தொடக்க நிலை விசாரணையும் தேவையில்லை. இச்சட்ட திருத்தங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி இயற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இப்புதிய சட்டத் திருத்தங்கள் அரசியல் சட்டத்திலுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை, சமத்துவத்திற்கும் வாழும் உரிமைக்கும் எதிரானவை என்று கூறி வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை விரைவில் நடைபெறும் எனத் தெரிகிறது.
�,