இந்திய விமானப் படை தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இரு இந்தியப் போர் விமானங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்திய விமானப் படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இந்திய எல்லையில் கடந்த இரு தினங்களாகப் பதற்றம் நீடித்து வருகிறது.
இன்று காலை ரஜௌரி பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீசிவிட்டுத் திரும்பியதாகவும், அதனைப் பின்தொடர்ந்து வந்த இந்திய விமானங்களைப் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசீஃப் கபூர், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரு விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு விமானம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள்ளும் இன்னொரு விமானம் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் விழுந்ததாகத் தெரிவித்துள்ளார். ஒரு இந்திய விமானியைப் பாகிஸ்தான் கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம், “எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் வான்வெளி பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மனித உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது. இது இந்திய விமானப்படையின் தாக்குதலுக்கான பதிலடி இல்லை. தற்காப்புக்காக இந்தியாவை எச்சரிக்கும் வகையில் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாகிஸ்தான் கூறி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் தற்போது, இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தானின் எஃப் 16 போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியிருப்பதாகவும், அது பாகிஸ்தானின் நவ்சேரா பகுதியில் விழுந்து நொறுங்கியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பட்காம் பகுதியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது. விமானம் தீ பிடித்து எரிந்ததில் இரு விமானிகள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடப்பட்டு, பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
�,