எம்.பி.யை சுடுங்கள்: மிரட்டிய அமைச்சர் மீது போலீசில் புகார்!

Published On:

| By Balaji

அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சர்ச்சைத் துறை அமைச்சர் என்று அழைக்கும் அளவுக்கு சமீப நாட்களாக அவரது வார்த்தைகள் தடித்து ஒலித்து வருகின்றன. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 23) சாத்தூர் காவல் நிலையத்தில் அமைச்சருக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோதும் சரி, எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகும் சரி, அதிமுக அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகள் தொடர்கின்றன. ஜெ. மரணத்தைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாக பேசி வந்த அமைச்சர்கள் ஒரு கட்டத்தில் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் பற்றியும் பேசத் தொடங்கினார்கள். அதிலும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சுகள் அண்மை நாட்களாக அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தாய் மாமா இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் என்றும், ராகுலுக்கு யார் மடியில் உட்கார வைத்து காது குத்தினார்கள் என்றும் கேட்டு சில தினங்களுக்கு முன் சர்ச்சையைக் கிளப்பினார் ராஜேந்திரபாலாஜி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டங்களும் நடைபெற்றன. போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் செப்டம்பர் 21 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜேந்திரபாலாஜி விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூரை பற்றி தாறுமாறான வார்த்தைகளால் தாண்டவமாடினார். ‘’ஓட்டுக் கேட்கவும் சரியா வரல. நன்றி சொல்லவும் வரல. டெல்லியிலயே உட்கார்ந்திருக்கான். இங்க வந்தான்னா பன்னி சுடற துப்பாக்கிய எடுத்து சுட்டுடுங்க” என்றவர், ஒரு கணம் சுதாரித்துக் கொண்டு, ‘கொன்னுடாதீங்க. ரப்பர் குண்டு துப்பாக்கிய எடுத்து சுடுங்க அவனை “ என்று ராஜேந்திர பாலாஜி பேசிய பேச்சு காங்கிரஸ் கார்கள் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

விருதுநகர் மாவட்டத்தில் காமராஜர் காலத்தில் இருந்து காங்கிரசில் இருந்து வரும் பழுத்த காங்கிரஸ்காரரான தமிழக காங்கிரஸ் சொத்து மீட்புக் குழு உறுப்பினரும், செயற்குழு உறுப்பினருமான 88 வயது ராஜலிங்க ராஜா, அமைச்சர் மீது புகார் கொடுக்குமாறு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களிடம் வற்புறுத்தியிருக்கிறார்.

இதையடுத்து இன்று (செப்டம்பர் 23) விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜா சொக்கர், மேற்கு மாவட்டத் தலைவர் தளவாய் நடராஜன் ஆகியோர் ராஜலிராங்கராஜா தலைமையில் சாத்தூர் காவல் நிலையத்துக்கு சென்று ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்திருக்கிறார்கள்.

காவல்நிலையத்தில் நடந்தது பற்றி ராஜலிங்கராஜாவிடமே மின்னம்பலம் முதல் மொபைல் பத்திரிகை சார்பாகப் பேசினோம்.

“ஒரு மனிதனுக்குரிய அடிப்படைப் பண்பும், அமைச்சருக்கு இருக்க வேண்டிய மாண்பும் துளியும் இல்லாமல் ராஜேந்திரபாலாஜி காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூருக்கு கொலை மிரட்டல் விட்டிருக்கிறார். சுட்டுடுங்க என்று சொன்னவர் பிறகு சடக்கென ரப்பர் குண்டுபோட்டு சுடுங்கள் என்று சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறார்.

மாணிக் தாகூர் நன்றி சொல்லக் கூட வரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார் ராஜேந்திர பாலாஜி. அது முழுப் பொய். நகர்ப்புறங்கள் பலவற்றிலும் நன்றி சொல்லி முடித்துவிட்டுவிட்ட மாணிக் தாகூர், அண்மையில் தனது தாயார் இறந்துவிட்டதால் கிராமங்களுக்கு செல்ல இருந்த பயணத்தை ரத்து செய்துவிட்டார். இதெல்லாம் தெரியாமல் இப்படி ஒரு மக்கள் பிரதிநிதியை பகிரங்கமாக பொதுக்கூட்டத்தில் மிரட்டுகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று (செப்டம்பர் 23) காலை சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம். காலை முதல் சாத்தூர் காவல்நிலையத்தில் போராடியும் மதியம் 12. 40 வரை புகாருக்குரிய ரசீது கூட கொடுக்கவில்லை போலீஸார். ‘சொந்த மாவட்ட அமைச்சர் என்ற உங்கள் தவிப்பு புரிகிறது. மேலிடத்தில் கேட்டுச் சொல்லுங்கள்’ என்று போலீஸாருக்கு அவகாசம் கொடுத்துவிட்டு அரைமணி நேரம் கழித்து மீண்டும் சென்றோம். ‘மேலே கேட்டுச் சொல்றோம்’ என்று தலையை சொரிந்தார்கள் போலீஸார்.

சாத்தூர் காவல்நிலையத்தில் புகாருக்கு ரசீது கூட கொடுக்கவில்லை. அடுத்து எஸ்பி. அலுவலகம், டிஜிபி அலுவலகம் என்று முறையிடுவோம். நியாயம் கிடைக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம். ராஜேந்திரபாலாஜிக்கு அவர் வழியில் அல்லாமல் சட்டப்படி தக்க பாடம் புகட்டுவோம்” என்று கூறினார் ராஜலிங்க ராஜா.

நம்மிடம் பேசிய மேலும் சில காங்கிரஸ் நிர்வாகிகள், “ காங்கிரஸ் தலைவர்களைக் கடுமையாக பேசினால் தங்கள் டாடி மோடியிடம் நற்பெயர் எடுத்து தங்கள் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள். ஏற்கனவே முதல்வர் எடப்பாடியே சிதம்பரம் பூமிக்கு பாரம் என்று அருவெறுப்பாக விமர்சித்தார். அவர் வழியில் சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்கொண்டுள்ள அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அதிலிருந்து தப்பிக்க ராகுல் முதற்கொண்டு காங்கிரஸ் தலைவர்களை சரமாரியாக தாக்கி வருகிறார். இதனால் பாஜகவின் கருணை கிடைக்குமா என்று பார்க்கிறார்” என்கிறார்கள்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share